இலங்கை விமானப்படை விழா-இந்திய விமானங்களை அனுப்பக்கூடாது: வைகோ

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
இலங்கையின் விமானப்படை தனது 16வது ஆண்டு நிறைவை வருகின்ற மார்ச் மாதம் கொண்டாட உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியில் நமது இந்திய விமானப்படை தனது அணி வரிசையின் உச்ச நிலையில் உள்ள சுகோய்-30 ரக போர் விமானங்களை, இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் நாக் பிரவுன் தலைமையில் அனுப்பி, கொழும்புவில் நடைபெறுகின்ற விமானப்படைக் கொண்டாட்டத்தில் வான்வெளி சாகசத்தில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டு உள்ளதாகவும் அறிகின்றேன்.
இந்த வேளையில், 2004ம் வருடம் நவம்பர் மாதம் 10ம் நாள், நான் தங்களிடம் நேரில் அளித்த கடிதத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அந்தக் கடிதத்தில், இந்திய விமானப்படை தங்களது செலவில், இலங்கையின் பலாலி விமானதளத்தைப் புதுப்பிப்பதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து இருந்தேன்.
ஏனென்றால், அந்தப் பலாலி விமான தளத்தைப் பயன்படுத்தி, இலங்கை விமானப்படை யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற அப்பாவி மக்கள் மீது விமானத்தில் இருந்து கொத்துக்குண்டுகளை வீசியும், குண்டுமழை பெய்தும், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.
2011 ஜனவரியில், நான் தங்களிடம் நேரில் கொடுத்த கடிதத்தில், இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற வேதனையும், ஆத்திரமும் தமிழ்நாட்டில் இளைய தலைமுறையிடம் ஏற்பட்டு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுகோய் போர் விமானங்களை இலங்கை விமானப்படையின் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்கச் செய்யும் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு நியாயம் அற்றது; அழிவை ஏற்படுத்தும் தவறான முடிவு. வேதனைத்தீயில் வெந்து கொண்டு இருக்கின்ற தமிழ் மக்கள் உள்ளத்தில், இந்திய அரசாங்கத்தின் மீது மேலும் கோபத்தையும், வெறுப்பையும் எதிர்ப்பையும் வளரச் செய்யும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழர்கள் மீது குண்டு வீசிக் கொன்று ஒழித்ததை, இலங்கை அரசாங்கம் விமானப்படை விழாவாகக் கொண்டாடுகின்றது. அந்தக் கொண்டாட்டங்களில், இந்திய அரசும் பங்கு ஏற்கப் போகிறதா?.
அவ்வாறு பங்கேற்றால், இலங்கை அரசாங்கம் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக ராணுவத் தாக்குதல் மூலமாக அழித்ததற்கு உதவியாகப் பங்கு ஏற்றதற்கு, இந்திய அரசு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாகக் கருத வேண்டிய நிலைமை ஏற்படும்.
வருத்தத்தைச் சுமந்துகொண்டு இருக்கின்ற தமிழர்களின் உள்ளத்தில், கொழுந்து விட்டு எரியும் வேதனை நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுகின்ற செயலைச் செய்யாதீர்கள் என்று வேண்டுகிறேன்.
ஏற்கனவே காயம்பட்ட உள்ளங்களை மேலும் குத்திக் கிளறாதீர்கள். வெந்த புண்ணில் வேல் வீசாதீர்கள் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் இனத்தின் இளைய தலைமுறையின் உள்ளத்தில், இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைக்காதீர்கள். அப்படிச் செய்தால், இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு எனும் கோட்பாடு தகர்ந்து போகும்.
மேற்கூறிய காரணங்களுக்காக, இலங்கை விமானப்படைக் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்க, இந்திய விமானப்படையை அனுப்பக்கூடாது என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ கடிதத்தில் கூறியுள்ளார்.
இன்று மதிமுக பொதுக்குழு-வைகோ மீண்டும் தேர்வு:
இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தல், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு, தேர்தல் யுக்திகள் குறித்து விவாதிக்க மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.
இக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளராக வைகோ ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுகவின் அவைத் தலைவராக திருப்பூர் துரைசாமி, பொருளாளராக திண்டிவனம் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications