'இது ரயில்வே பட்ஜெட் அல்ல..மேற்கு வங்க தேர்தல் அறிக்கை'!
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் மகிழ்ச்சியடைவதற்கு ஒன்றும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ரயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள 3வது ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அந்த வகையில் இது சாதாரண மக்களின் பட்ஜெட்டாக இருக்கிறது. பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள பெரும்பாலான திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே மந்திரியின் சாதனை குறிப்பிடும்படியாக இல்லை. ரயில்வே அமைச்சகத்தின் நிதி நிலைமையும் திருப்திகரமாக இல்லை.
வருவாய் பெருக்கத்திற்கும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் காணப்படவில்லை. இந்தப் போக்கு, தேசிய பொருளாதாரத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதுடன், உலகத்தில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். இந்த ரயில்வே பட்ஜெட்டால் தமிழ்நாடு மகிழ்ச்சியடைவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. சில மின்சார ரயில்கள், இரண்டு புயல்வேக ரயில்கள் தவிர, தமிழ்நாட்டிற்காக புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மம்தா பானர்ஜி தனது சொந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் யுத்தம் நடத்தி வெற்றி கண்ட நந்திகிராம் மற்றும் சிங்கூர் ஆகிய இடங்கள் பயன்பெறும் வகையில் பல பெரிய திட்டங்களை அறிவித்துள்ளார். மொத்தத்தில், தேசிய வளம் ரயில்வே மந்திரியால் உள்ளூர் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை ஒதுக்கிவிடவோ, மறுக்கவோ முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முழு திருப்தி அளிக்காது-வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்குகள் கட்டணம் உயர்த்தப்படாதது, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சலுகைகள், ரயில்வே ஊழியர் நலனுக்கான திட்டங்கள், தமிழகத்துக்கு இரண்டு புதிய துரந்தோ ரயில் சேவைகள், மன்னார்குடி புதுக்கோட்டை, கூடுவாஞ்சேரி ஸ்ரீபெரும்புதூர் புதிய ரயில் பாதைகள் மற்றும் சென்னைக்குக் கூடுதல் மின் ரயில் போன்ற வரவேற்கத்தக்கவை இருந்தாலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பின்தங்கியுள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் சென்னை- கன்னியாகுமரி முக்கிய வழித்தடத்தில் தாம்பரம் விழுப்புரம் இரட்டைப் பாதைத் திட்டத்திற்கும், விழுப்புரம்- திண்டுக்கல் இடையேயான 272 கி.மீ. தூரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் தாமதமாகி வருகின்றன.
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அகலப் பாதை அமைக்கும் திட்டங்கள், இரட்டை ரயில் பாதை, புதிய ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் போன்ற பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் கிடப்பில் கிடக்கின்றன. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.
சென்னையிலிருந்து கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கும், சென்னை பெங்களூர் இடையேயும் தனிச் சரக்கு ரயில் பாதை அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முந்தைய ரயில்வே பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு இன்னும் செயலாக்கம் பெறவில்லை.
கோவை, மதுரை போன்ற நகரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும், மாதிரி ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற திட்டங்களும் வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டன.
ரயில் பயணிகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தரமான உணவு குறித்த மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. மாநில அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்யாத தமிழக அரசின் அலட்சியத்தால் பல திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
போதிய நிதி ஒதுக்கீடு இன்றித் தமிழக ரயில்வே திட்டங்கள் ஆமை வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு சில புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு மட்டுமே தமிழ்நாட்டுக்கு முழு திருப்தி அளிக்காது என்று கூறியுள்ளார்.
புதுமை ஏதுமில்லை-ராமதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ரயில்வே பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை தவிர்த்து இந்த பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை. மிக விரைவில் நடைபெற இருக்கும் மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மம்தா பானர்ஜி மத்திய ரயில்வே பட்ஜெட்டை தயாரித்து அளித்துள்ளார். அந்த அளவிற்கு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ஒரு சில புதிய திட்டங்கள், பெரும்பாலான புதிய ரயில்கள் அனைத்தும் மேற்குவங்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 56 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதில் சில தொடர் வண்டிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழ்நாடு வழியாகவும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் இரு ரயில்கள் தவிர மற்றவை நாள்தோறும் இயக்கப்படுபவை அல்ல. இவை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் குறுகிய ரயில் பாதை (மீட்டர் கேஜ்) அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தொடர் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இயக்கப்பட்டு வந்த இரண்டு தொடர்வண்டிகள் மட்டுமே இந்தப் பாதை வழியாக இயக்கப்படுகின்றன.
சென்னை பரங்கிமலையில் இருந்து மகாபலிபுரம் வழியாக புதுச்சேரிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் பாமக அமைச்சரின் பெரு முயற்சியால் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
தங்கபாலு பாராட்டு:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசின் கடந்த ஆண்டுகால சிறந்த சாதனைகளை தொடர்ந்து இந்த ஆண்டும் ரயில்வே வரவு- செலவு அறிக்கையில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு இல்லை என்பது மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும்.
நாட்டின் அற்புதமான வளர்ச்சிக்கும், அனைத்து மக்களின் வாழ்வுயர்வுக்கும் பயனளிக்கும் வண்ணம் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த ரயில்வே வரவு - செலவு அறிக்கைக்காக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கும், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயதுரை எம்.பி. நன்றி:
அதே நேரத்தில் சென்னை-திருச்செந்தூர் இடையே ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றியதற்காக, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, தூத்துக்குடி எம்பி ஜெயதுரை நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வரும் சென்னை-திருச்செந்தூர் இடையே ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தினசரி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும்படி, அனைத்துக் கட்சி தலைவர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு சமுதாய மற்றும் வர்த்தக சங்கங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. இந்த நிலையில், கோரிக்கையை நிறைவேற்றிய பானர்ஜிக்கு, நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
சரத்குமார் பாராட்டு:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு இவற்றை கருத்தில் கொண்டு ரயில்வே சரக்கு கட்டணத்தையும் தொடர்ந்து 8 ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தையும் உயர்த்தாமல் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ரயில் விபத்துக்களை குறைப்பதற்கும் பயணிகள் பாதுகாப்புக்கும் அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மொத்தத்தில் ஏற்றத்தாழ்வுகளற்ற சமமான பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது என்று கருதலாம் என்று கூறியுள்ளார்.
தரகர்களுக்கே லாபம்-சேதுராமன்:
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல சலுகைகளை மம்தா அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களைவிட தரகர்களுக்கே லாபம்'' என்று கூறியுள்ளார்.
இது மேற்கு வங்க தேர்தல் அறிக்கை-பாஜக:
இந் நிலையில் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட், மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் அறிக்கை போல இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் அனந்த குமார் கூறுகையில், மம்தா பானர்ஜியின் ரயில்வே பட்ஜெட்டின் ஒட்டு மொத்த கவனமும் மேற்கு வங்காளத்தை நோக்கி மட்டுமே உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications