தேர்வு நேரத்தில் தேர்தல் நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது-ஜெ.

சட்டசபைத் தேர்தல் தேதிக்கு முதல்வர் கருணாநிதி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தை அ.தி.மு.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மு.தம்பிதுரை, துணைத் தலைவர் டாக்டர் வி.மைத்ரேயன் ஆகியோர் குரேஷியிடம் நேரில் அளித்தனர்.
அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளது:
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புதன்கிழமை (மார்ச் 2) தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தொடங்கும் பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளையும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
மாணவர்களின் தேர்வுகள் நடைபெறும் அதே நேரத்தில், தேர்தலுக்கான பணிகளும் உச்சகட்ட நிலையில் நடைபெறும். இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக அமைவதுடன், மாணவர்களின் தேர்ச்சித் திறனிலும் மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களின் பணிகளும் பாதிப்படையும். ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப் பதிவு பணியில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதற்கு முன்பு நடைபெறும் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொதுத்தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களால், தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் சிரமங்கள் ஏற்படும். இதேபோல் கல்லூரித் தேர்வுகளும் ஏப்ரல் இறுதி வரை நடைபெறுகின்றன.
மேலும், ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடப்படும் தமிழ் வருடப் பிறப்பு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை ஆகும். தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இந்த நாளை கொண்டாடுவது வழக்கம். இதன் காரணமாக தேர்தல் நாளில் வாக்குப் பதிவு சதவீதம் குறையவும், கள்ள ஓட்டுகள் அதிக அளவில் பதிவு செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்துக்கு சட்டப் பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நேற்று சென்னையில் பேட்டி அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தேர்தல் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வைகோவும் எதிர்ப்பு:
தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந் நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட நாளாகும். தேர்தல் பிரசாரத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதால் இது மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.மேலும் சித்திரை திருநாள் என்பதால் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. தமிழக அரசும் இந்த நாளை அம்பேத்கர் பிறந்த தினமாகஅறிவித்து விடுமுறை அளித்துள்ளது. சித்திரை திருநாள் தமிழகத்தில் ஒரு முக்கிய பண்டிகை திருநாளாகும்.மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டு இத்திருநாளை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதால் அந்த நாளும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.16ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இடையில் 15ம்தேதி ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் 12ம் தேதியே விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்ககள் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட போய்விடுவார்கள். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். ஆகவே தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications