அதிமுகவுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி-சோனியா தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Sonia
டெல்லி: திமுகவுடன் சமரசத்திற்கு வாய்ப்புண்டா என்ற பரிசீலனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். அதேசமயம், திமுகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாமா என்பது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறார்.

திமுக தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டது. அத்தோடு நில்லாமல் நாளை தனது அமைச்சர்களை ராஜினாமா கடிதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டது. மேலும், தனது தேர்தல் தொடர்பான பணிகளிலும் அது வழக்கம் போல ஈடுபடத் தொடங்கி விட்டது. இன்று பாமகவுடன், என்னெனன தொகுதிகளை ஒதுக்கலாம் என்ற ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளது.

மறுபக்கம் காங்கிரஸ் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பதில் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளது. திமுகவின் அமைச்சர் பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும், குலாம் நபி ஆசாத்தும் சந்தித்துப் பேசியுள்ளனர். மறுபக்கம் சோனியா காந்தி தன் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு 3 வாய்ப்புகள்:

காங்கிரஸ் முன்பு தற்போது 3 வாய்ப்புகளே உள்ளன. அவை..

1. தனது நிலையை தளர்த்திக் கொண்டு திமுகவுடன் சமரசமாகப் போவது. திமுக தரும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்பது.

2. தனித்துப் போட்டியிடுவது.

3. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது.

முதல் வாய்ப்பான சமரசம் என்பது மிகவும் தாமதமாகி விட்ட ஒன்றாகும். அப்படியே சமரசம் செய்து கொண்டு திமுக தரும் தொகுதிகளில் போட்டியிடுவது என்றாலும் கூட மனதளவில் கொந்தளித்துப் போயுள்ள திமுகவினர், காங்கிரஸுக்கு சாதகமாக நடந்து கொள்வார்களா என்பது பெரும் கேள்விக்குறியாகும். இயல்பான ஒத்துழைப்பு திமுகவினரிடமிருந்து கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது.

2வது வாய்ப்பான தனித்துப் போட்டியிடுவது என்பது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதிப்பதற்குச் சமமானதாக கருதப்படுகிறது. காரணம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை உலகம் அறிந்தது. திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓசி சவாரி செய்தே பழக்கப்பட்டு விட்டது காங்கிரஸ். மேலும், அக்கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல் கின்னஸ் சாதனைக்கு அனுப்பத் தகுதி பெற்றது. இத்தனை கோஷ்டிகளை வைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிட்டால், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தற்போது பாஜக இருக்கும் நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம்.

3வது வாய்ப்பு, அதிமுகவுடன் சேருவது. இதிலும் பெரும் சிக்கல் உள்ளது. சோனியா காந்தியை ஜெயலலிதா திட்டித் தீர்த்ததை இன்னும் மறக்கவில்லை காங்கிரஸார். மேலும், தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளைக் கொடுத்து விட்டார் ஜெயலலிதா. இன்னும் மதிமுக, இடதுசாரிகள் உள்ளன. மேலும், காங்கிரஸ் வருவதாக இருந்தால் முதல் ஆளாக மதிமுக, இடதுசாரிகள் கூட்டணியை விட்டு வெளியேறும். அதை ஜெயலலிதா விரும்புவார் என்பது உறுதியில்லை.

இப்படி எந்தப் பக்கம் போனாலும் எக்குத்தப்பாக இருப்பதால் காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தன்னை சமரசம் செய்து கொண்டு, திமுகவுடனான மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு வெட்கம், மானம் பார்க்காமல் திமுகவுடன் அனுசரித்து நடந்து கொள்வது ஒன்றே அக்கட்சியை ஓரளவுக்கேனும் காப்பாற்ற உதவும் என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.

தேமுதிகவை அதிமுக கூட்டணியிலிருந்து பிரித்துக் கூட்டி வந்து அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும் காங்கிரஸ் தரப்பிலிருந்து யோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கூட்டணிப் பேரத்தை முடித்து விட்டு, சீட்களையும் பெற்று விட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி, காங்கிரஸுடன் இணைந்தால், தேமுதிகவுக்கு வரலாறு காணாத கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அந்த முடிவை விஜயகாந்த் எடுப்பாரா என்பது தெரியவில்லை.

இப்படி திக்குத் திசை தெரியாத நிலைக்கு காங்கிரஸைக் கொண்டு போய் வைத்து விட்டது கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம். இதிலிருந்து காங்கிரஸ் மீளும் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+