'பெருந்தலைவர் மக்கள் கட்சி'-சரத் தலைமையில் நாடார் அமைப்புகள் புது கட்சி!

இதுவரை அவர் நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் வருகிற தேர்தலை சந்திக்கவுள்ள நாடார் அமைப்புகள், தேர்தலுக்குப் பின்னர் பெருந்தலைவர் மக்கள் கட்சி என்ற பெயருக்கு மாறவுள்ளன.
நாடார் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நாடார் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார்.
கூட்டத்தில் இந்திய நாடார்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகரன், தமிழ்நாடு கிராமணி குல முன்னோர் சங்க தலைவர் த.மோகன், காமராஜ் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், எம்.என்.ராஜா, ஜாகுவார் தங்கம், ஈரோடு மாரியப்பன், சேலம் செல்லப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார் வரவேற்றார். இறுதியாக சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து நன்றி கூறினார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
1. அனைத்து நாடார் சங்க அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது என்றும், அந்த கட்சிக்கு 'பெருந்தலைவர் மக்கள் கட்சி' என்று பெயரிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கட்சியின் தலைவராக ஆர்.சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் உயர்மட்ட குழுவால் விரைவில் அறிவிக்கப்படும்.
2. இந்த கட்சிக்காக பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்டுள்ள கொடி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும். இந்த கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. கீழ்க்கண்டவர்கள் இந்த புதிய கட்சிக்காக உயர்மட்ட குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை வகுப்பார்கள்.
1.எஸ்.டி.நெல்லை நெடுமாறன், 2.எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், 3. ஆர் சரத்குமார், 4. பி.சின்னமணி நாடார், 5. ஜி.கரிக்கோல்ராஜ், 6. என்.ஆர்.தனபாலன், 7.எர்ணாவூர் ஏ.நாராயணன், 8.டி.ராஜ்குமார், 9.ஈரோடு மாரியப்பன், 10.சூலூர் சந்திரசேகரன், 11.டி.தங்கமுத்து.
நோக்கம் என்ன?:
கூட்டத்தில் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் பேசும்போது, "நாடார் சமுதாயத்தில் பல பெரிய அமைப்புகள் இருந்தாலும் அரசியல் சக்தியாக எந்த அமைப்பும் இல்லாமல் இருந்தது. நமது சமுதாயத்திற்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காகவே அனைத்து சங்கங்களும் இணைந்து ஒரே கட்சியாக வருகிற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.
நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன் பேசும்போது, "தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு அணியிலும் பல்வேறு சமுதாய கட்சிகள் தொகுதி பங்கீடுகள் பெற்றுள்ளன. அவைகள் முந்தையை தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்துள்ளன.
ஆனால் நாம் இரு அணிகளிலுமே தொகுதி பங்கீடு கேட்டுச்சென்றால் ஆதரவு மட்டும் தெரிவியுங்கள் என்று கூறிவிடுகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம் பலத்தை இதுவரை நிரூபிக்காதது தான். எனவே இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.'' என்றார்.
தலைவர் ஆர் சரத்குமார்:
பின்னர் ஆர்.சரத்குமார் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறுகையில், "நாடார் சமுதாய ஒற்றுமை இப்போது சிறந்த முறையில் ஏற்பட்டுள்ளது. முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளை அப்புறப்படுத்திவிட்டோம். எங்களுக்கு உரிய மரியாதையை யார் தருகிறார்கள் என்று பார்ப்போம். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதெல்லாம் ஓரிரு நாளில் அறிவிப்போம். அப்படி இல்லை என்றால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு செய்வோம்.
62 தொகுதிகளில் நாங்கள் பலமாக இருக்கிறோம். இந்த தேர்தலில் எங்கள் பலத்தை, வாக்கு வங்கியைக் காட்ட முடியும். நாங்கள் அணி சேரும் கட்சியை வெற்றிபெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, என்றார்.












Click it and Unblock the Notifications