கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகும்?

இந்தத் திட்டத்தை விஜயகாந்த் தனது மனதில் ஒரு ஓரத்தில் வைத்திருப்பதாகவும், தேவைப்பட்டால் இந்த முடிவை எடுக்க அவர் தயங்க மாட்டார் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
போட்டியிட்டால் தனித்தே போட்டி, யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். தெய்வத்துடனும், மக்களுடனும் மட்டுமே எனது கூட்டணி என்றெல்லாம் வீராவேசமாக பேசி வந்த விஜயகாந்த், முதல் ஆளாக அதிமுக கூட்டணியில் சேர்ந்து 41 சீட்டுகளையும் அள்ளிக் கொண்டு வந்து விட்டார்.
விஜயகாந்த் கட்சியின் வருகையால் மனம் குளிர்ந்து, உவகையாகிப் போன ஜெயலலிதா, கூடவே இருந்து வரும் வைகோவை தூக்கி கிடப்பில் போட்டு விட்டார்.
இந்த நிலையில் தற்போது அரசியல் அரங்கில் புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அது தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது.
விஜயகாந்த்துக்கு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததில் முழு திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லையாம். கூட இருந்தவர்கள் தொடர்ந்து தொணத்தி வந்ததால்தான் கூட்டணிக்கே அவர் சம்மதித்தாராம். வேட்பாளர் நேர்காணலின்போதும் கூட இதைத்தான் அவர் சொன்னாராம். எல்லோரும் சொன்னீங்கன்னு சேர்ந்துட்டேன். இருந்தாலும், என்னால் 41 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை நான் விரும்பவில்லை என்று கூறினாராம் விஜயகாந்த்.
இதை வைத்து புதிய செய்தி பரவி வருகிறது. அது, தான் விரும்பியபடி, சாதகமான தொகுதிகளை அதிமுக தரத் தயங்கினால், அடுத்த விநாடியே கூட்டணியிலிருந்து விலகி விடுவது என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார் என்பதுதான்.
இப்படி உண்மையிலேயே விஜயகாந்த் நினைக்கிறாரா அல்லது எதிர்த் தரப்பிலிருந்து கிளப்பி விடப்படும் வதந்தியா என்பது தெரியவில்லை.
அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!












Click it and Unblock the Notifications