அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு மகிழ்ச்சி தருகிறது-திருமா
சென்னை: அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு மகிழ்ச்சி தருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை இன்று திருமாவளவன் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
ராமதாஸ் பேசுகையில், தேர்தலுக்கு பிறகு திமுக தனித்து ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவளிப்போம். ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. 2ஜி விவகாரம் எங்களது வெற்றியை பாதிக்காது, அது தேர்தல் சமயத்திலான ஒரு பிரசார யுக்தியாகவே கருதவில்லை.
விடுதலை சிறுத்தைகளும், பாமகவும் தேர்தல் களத்தில் ஒன்றாக இருக்க கடந்த காலங்களில் முயற்சி எடுத்தோம். ஆனால் அப்போது முடிவு என் கையில் இல்லை. இப்போது இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த கூட்டணியில் சமய, சமுதாய நல்லிணக்கம் பிரதிபலிக்கும் பாமக தொண்டர்களும் விடுதலை சிறுத்தை தொண்டர்களும் நீண்ட நாட்களாக எதிர் பார்த்தது போல் இப்போது கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
6 வது முறையாக கருணாநிதி முதல் அமைச்சராக பொறுப்பேற்பார். பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் பலமாக உள்ளனர்.
அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இருவரும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம். கலைஞரை 6 வது முறையாக முதல் அமைச்சர் ஆக்க என்னென்ன வழி முறைகள், யுக்திகள் என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம் என்றார்.
கனவுக் கோட்டை தகர்ந்தது-திருமாவளவன்:
தொடர்ந்து பேசிய திருமாவளவன், பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. எற்கனவே சமூக மொழி, இன உணர்வு தளங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். தமிழர் பாதுகாப்பு தளத்தில் 3 ஆண்டுகள் தீவிரமாக பணி யாற்றி உள்ளோம். இந்த இரு இயக்கங்களும் இணைய முடியாது, இணைய கூடாது என்று நினைத்தவர்களின் கனவு கோட்டை தகர்ந்து விட்டது.
இப்போது நாங்கள் இணைந்திருப்பதால் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவதை உறுதி மொழியாக ஏற்று பிரசாரம் செய்வோம்.
வன்னியர்கள், தலித்துகள் ஒருங்கிணைந்து வாழ டாக்டர் ராமதாஸ் ஏராளமான செயல் திட்டங்களை வகுத்து வந்துள்ளார். எங்களின் 20 ஆண்டு கால கனவு நனவாக இந்த கூட்டணி மூலம் அருமையான சூழல் உருவாகி உள்ளது. பாமக இந்த கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம். எனவே அவர்கள் விரும்பிய குன்னம், புவனகிரி ஆகிய தொகுதிகளை விட்டுக் கொடுத்தோம்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் குரு போட்டியிட இருந்ததால் குன்னம் தொகுதியை திமுக கேட்டபடி விட்டு கொடுத்தோம். இப்படி எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நல்லிணக்க உறவை உருவாக்கி இருக்கிறோம். எனவே விடுதலை சிறுத்தைகளும், பாமகவும் இணைந்து நல்லிணக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications