நம்பகமான தகவல் இல்லாமல் வாகன சோதனை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் கட்சியினரால் பணமோ ஆயுதமோ கொண்டு செல்லப்படுவதாக
நம்பகமான தகவல் இல்லாமல் தேர்தல் ஆணையம் வாகன சோதனை நடத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் ஒழுங்குபடுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு பொது மக்கள், வியாபாரிகளின் பணம், பொருட்களை பறிமுதல் செய்வது சரியல்ல என்றும் தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கெடுபிடி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. திருமணத்துக்கு வாங்கிச் செல்லும் நகைகள், வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்துக்கெல்லாம் கணக்கு கேட்டு படுத்தி எடுப்பதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், வாக்காளர்களை குறிப்பிட்ட நபர்களுக்கு ஓட்டுப்போட செய்வதற்காக அவர்களுக்கு பணம், பொருட்களை சட்டவிரோதமாக கொடுப்பதற்கு வேட்பாளர்களோ, அரசியல் பிரமுகர்களோ முயன்றால் அவற்றை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் விதிப்படி நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், வியாபாரத்துக்காக சிறுவாகனங்களில் கொண்டு செல்லும் பொருட்களையும் தேர்தல் நடவடிக்கை என்ற பெயரில் பறித்துவிடுகின்றனர். பொதுமக்களிடம் இவர்கள் மேற்கொள்ளும் பறிமுதல் அனைத்தும் சட்டவிரோதமாகும். எனவே பொதுமக்கள் சுதந்திரமாக பணம், பொருட்களுடன் செல்வதற்கு பறக்கும் படையினர் இடையூறு செய்வதை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அவர்களால் நியமிக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பொதுமக்களிடம் பணம், பொருட்களை பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடுவதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது என்றும், இவர்களின் நடவடிக்கையால் மக்களுக்கு பெரும் தொல்லை உருவாகிறது என்றும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.தியாகராஜன், ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாதிட்டனர்.

இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், பொருட்களை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதுவரை ரூ.20 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் பின்பற்றப்படும் பறிமுதல் நடவடிக்கைகளை, பொதுமக்களிடமும் மேற்கொண்டு அவர்களை பாதிப்படையச் செய்ய முடியுமா... அது சரியானதுதானா? என்று கேட்டனர்.

இதுதொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகராஜன், தேர்தல் அதிகாரிகள் சோதனை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. இது பற்றி முதல்வர் கருணாநிதி கூட கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்றார்.

அதற்கு நீதிபதிகள், ஆமாம்..அந்த அறிக்கையை நாங்களும் பார்த்தோம். இதற்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க வேண்டும். கருணாநிதி அறிக்கையை நாங்களே தானாக முன்வந்து தேர்தல் கமிஷனுக்கு எதிரான வழக்காக பதிவு செய்கிறோம் என்றனர்.

அப்போது அமைச்சர் கே.பி.பி.சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டிலும் தேர்தல் அதிகாரி கள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். 1 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடந்து இருக்கிறது. நம்பகமான தகவல் ஏதும் இல்லாமலே சோதனை செய்துள்ளனர். இது அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது என்றார்.

தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடுகையில், தேர்தல் அதிகாரிகள் சோதனையால் சிறு வியாபாரிகளும் நகை வாங்க, நிலம் வாங்க பணம் எடுத்து செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய பணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றனர் என்றார்.

அப்போது தேர்தல் கமிஷன் வழக்கறிஞர் ராஜகோபாலன் குறுக்கிட்டு, நாங்கள் ரூ. 10 லட்சத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றால் மட்டுமே பறிமுதல் செய்கிறோம். உரிய தகவலின் அடிப்படையில் தான் சோதனை நடக்கிறது என்றார்.

அதற்கு நீதிபதிகள், தேர்தல் ஆணையம் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. நோயாளிகள் கூட தங்கள் கழுத்தில் "நான் நோயாளி'' என்று எழுதி அட்டையை தொங்க விட்டு சென்றால் தான் விடுவார்கள் போல இருக்கிறது என்றனர்.

இதை தொடர்ந்து ராஜகோபாலன் பேசுகையில், வாகனங்களில் ஆயுதம் எடுத்து செல்லக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் ஆகிய 2 நோக்கங்களுக்காகத்தான் சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

அதற்கு நீதிபதிகள், அதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. ஆனால் மக்கள் பணமே எடுத்து செல்லக்கூடாது என்று தடுப்பதை தான் எதிர்க்கிறோம் என்றனர்.

அப்போது மீண்டும் குறுப்பிட்ட ராஜகோபால், தமிழ்நாட்டில் 1 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பாதிபேர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இவர்களை எப்படி பொதுமக்களாக கருத முடியும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை தேர்தல் கமிஷன் நம்பகமான தகவல் அடிப்படையில் மட்டுமே சோதனை மற்றும் வாகன சோதனைகளை நடத்த வேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சோதனைகள் அமைய வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் திங்கள்கிழமை விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். முதல்வர் அறிக்கைக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+