For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் செய்தது தான் சரி: ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் போலீஸ் மற்றும் அதிகாரிகளை மாற்றவோ, புதிதாக நியமிக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்ததில் தவறில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு,

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளை முறியடிக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்கவும், சிறு வணிகத்தில் அந்நிய மூலதனத்தை தடுக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அனைத்து அத்தியாவசிய பொருட்களை ரேஷனில் வழங்கவும், அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா 35 கிலோ அரிசி வழங்கிடவும் பாடுபடுவோம்.

மின்தடை அறவே ரத்து செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், மணல் கொள்ளை, நில மோசடிகளுக்கு முடிவு கட்டவும், பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும், அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கவும் உழைப்போம்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேலையில்லா காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கவும், அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கவும், விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், அனைத்து விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யவும், புதிய கடன்களை வட்டியில்லாமல் வழங்கவும் வற்புறுத்துவோம்.

சமச்சீர் கல்வி முறையை அமலாக்கிடவும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை, நடுத்தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ், ரயில் பாஸ் வழங்கவும், சிறுபான்மையினர் நலன்காக்க ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி இடஒதுக்கீடு வழங்கவும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கவும், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டவும் போராடுவோம்.

மக்கள் நலனுக்கே முழு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பும், நேர்மையும், தூய்மையும் நிறைந்த அரசியல் பண்பாட்டை கட்சி உறுதியுடன் பற்றி நிற்கும், அதற்காக போராடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ஏப்ரல் 5-ம் தேதி கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும், 6-ம் தேதி திருவெறும்பூரிலும், திருச்சியிலும், 7-ம் தேதி திருப்பூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். சீத்தாராம் எச்சூரி வரும் 3-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, 4-ம் தேதி அரூர், 5-ம் தேதி சென்னையிலும் பிரசாரம் செய்கிறார். பிருந்தா காரத் வரும் ஏப்ரல் 1-ம் தேதி சென்னை, 2-ம் தேதி விக்கிரவாண்டி - சிதம்பரம், 3-ம் தேதி கீழ்வேளூர், 4-ம் தேதி பெரியகுளம், போடி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

மாநிலக் குழுவினரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறோம். 50க்கும் மேற்பட்ட கலைக்குழுவினரை கொண்டு கலைகள் மூலமாகவும் பிரசாரம் செய்யவிருக்கிறோம்.

முதல்வர் கருணாநிதி இதுவரை 3 பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால் ஒன்றில் கூட மக்கள் பிரச்சனைகள் பற்றியோ, அதைத் தீர்க்கும் வழிகள் பற்றியோ பேசவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்கட்சியை ஆளுங்கட்சியாக்க முயன்று வருவதாக மட்டுமே கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் பொது மக்கள், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது. அதே சமயம் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதை கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும்.

வரும் தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை யாரும் பயன்படுத்தாமல் தேர்தல் ஆணையம் தான் தடுக்க வேண்டும். தேர்தல் நேர்மையான முறையில் நடக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் போலீஸ் மற்றும் அதிகாரிகளை மாற்றவோ, புதிதாக நியமிக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள்.

எங்கள் கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டதற்கு, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி தான் கூறமுடியும் என்றார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, கால அவகாசமில்லாததால் அதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறோம். அதை ஒரு பிரச்சனையாகவே நாங்கள் நினைக்கவில்லை என்றார்.

English summary
CPI(M) state secretary G. Ramakrishnan has supported EC for transfering police and other officials after the announcement of election date. He has asked the EC to prevent politicians from using Thirumangalam formula in the assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X