2ஜி: ஏப்ரல் 1 வரை சிபிஐ காவலில் பல்வா தம்பி ஆசிப்
டெல்லி: 2ஜி விவகாரத்தில் நேற்று கைதான ஸ்வான் நிறுவன இயக்குனர் சாதிக் உஸ்மான் பல்வாவின் தம்பி ஆசிப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால் ஆகியோரை வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை சிபிஐ காவலில் இருப்பார்கள் என்று சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டுள்ள ரூ. 200 கோடி பற்றிய உண்மையைக் கூற மறுப்பதால் சிபிஐ தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது.
சினியுக் தனியார் தொலைக்காட்சி மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி மாற்றப்பட்டதில் இந்த இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் அகிலேஷ் நீதிமன்றத்தில் கூறினார்.
ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோர் குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் பிவிடி-ன் இயக்குனர்களாக இருந்தனர். இதில் ஆசிப் டிபி ரியாலிட்டி பிவிடியின் இயக்குனராகவும இருந்துள்ளார். ஆசிபின் சகோதரர் 2ஜி விவகாரம் தொடர்பாக தற்போது திகார் சிறையில் உள்ளார்.
ஆசிப், ராஜீவ் அகர்வால் சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆஜரானார். சிபிஐ மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை எல்லாம் விட்டுவிட்டு இவர்களை மட்டும் குறிவைப்பதாக குற்றம் சாட்டினார். 2ஜி உரிமம் வழங்கிய ஓராண்டு கழித்து தான் இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications