இன்று கோவையில் கருணாநிதி 2-வது கட்டபிரசாரம் துவக்கம்
சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று மாலை கோவையில் தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
தேர்தல் நாள் நெருங்குவதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் ஊர், ஊராகச் சென்று தீவிர பிரசாரம் செய்கின்றனர். இந்நிலையில் முதல்வர் கருணாநிதி தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தை இன்று கோவையில் தொடங்குகிறார்.
இன்று மாலை 6 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அப்போது கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதில் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து நாளை(31-ம் தேதி)ஈரோட்டில் நடக்கும் கூட்டத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
வரும் 1-ம் தேதி சேலத்தில் பிரசாரம் செய்கிறார். அங்கு நடக்கும் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார். 2-ம் தேதி வேலூர் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த பகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இதையடுத்து 4-ம் தேதி வடசென்னையிலும், 5-ம் தேதி தென்சென்னையிலும் பிரசாரம் செய்கிறார். 6-ம் தேதி மதுரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். 8-ம் தேதி விழுப்புரம், திண்டிவனத்தில் பிரசாரம் செய்கிறார்.
9-ம் தேதி பாண்டிச்சேரி மற்றும் கடலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 10, 11 ஆகிய தேதிகளில் திருவாரூரில் பிரசாரம் செய்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை வரவேற்க கட்சியினர் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications