கிருஷ்ணகிரி: ஹசீனா வேட்பு மனு திடீர் வாபஸ்-கணவர் வேட்பாளரானார்!

Subscribe to Oneindia Tamil

Hasina Syed
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதியில் அதிரடி திருப்பமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மனு தாக்கல் செய்த ஹசீனா சையத் நேற்று கடைசி நேரத்தில் திடீரென்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையது ஜியாவுல் ஹக் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவருக்கு அதிகாரபூர்வ கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷயத்தில் மெகா டிராமா நடந்தது.

முதலில் வேட்பாளராக ஹசீனா சையத் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மெகா டிவியில் அழகுக் குறிப்புகள் சொல்லி வந்த இவருக்கு சீட்டா என்று கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேலும் ரூ. 50 லட்சம் பணம் தந்து தான் இவர் இந்த சீட்டை வாங்கியதாகவும் புகார் கூறப்பட்டது.
கட்சியினரின் எதிர்ப்பு வலுக்கவே வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே கிருஷ்ணகிரி தொகுதிக்கு புதிய காங்கிரஸ் வேட்பாளராக மக்பூல் ஜான் என்பவரை காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

ஆனால், மக்பூல் ஜான் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இவரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் ஹசீனா தரப்பு முடக்கிவிட்டதாகவும், அவரை கடத்தி விட்டதாகவும், அவருக்கு ரூ. 10 லட்சம் விலைபேசி அவரை வளைத்துவிட்டதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இந் நிலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தவிர மேலும் 9 காங்கிரசார் போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹசீனா, மாற்று வேட்பாளரான அவரது கணவர் சையது ஜியாவுல் ஹக், உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் 9 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனு பட்டியலில் இருந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்துடன் விண்ணப்பித்த ஹசீனா சையதின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்த 7 பேரின் மனுக்களுடன் கட்சியின் அங்கீகார கடிதமான பி பார்ம் இணைக்கப்படவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இரு போட்டி வேட்பாளர்களின் மனுக்கள் சுயேச்சை வேட்பு மனுக்களாக ஏற்கப்பட்டன.

இந் நிலையில் மனுக்களை வாபஸ் பெற கடைசி நேரமான நேற்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பகல் 2.45 மணி அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ஹசீனா திடீரென்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இதனால் அவருக்கு மாற்று வேட்பாளராக மனு செய்திருந்த அவரது கணவர் சையத் ஜியாவுல் ஹக்கின் மனு காங்கிரஸ் வேட்பாளரின் மனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு கட்சியின் அதிகாரபூர்வ கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சையத் ஜியாவுல் ஹக், அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, பாஜக சார்பில் கோடீஸ்வரன் உள்பட 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந் நிலையில் சையத்துக்கு கை சின்னம் ஒதுக்குவதற்கு காங்கிரஸ் போட்டி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாற்று வேட்பாளருக்கு அதே சின்னம் ஒதுக்கப்படும். ஹசீனா வாபஸ் பெற்றுள்ளதால் சையத்துக்கு கை சின்னம் ஒதுக்கக் கூடாது என்றும் கிருஷ்ணமூர்த்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

இதையடுத்து இப் பிரச்சனை குறித்து வியாழக்கிழமை (இன்று) முடிவு எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த 'தர்மபுரி காங்கிரஸ் மெகா சீரியல்' எப்போது முடியுமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+