நான் திமுக அணிக்கு வருவேன் என்று எதிர்பார்த்தார்கள்-விஜய்காந்த்
மதுரை: எனக்கு ஆயிரம் கோடி கொடுத்தாலும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வெளியேற்ற ஒரு தொழிலதிபரால் பல கோடி பணம் தரப்பட்டதாக மதிமுக புகார் கூறி வரும் நிலையில், விஜய்காந்த் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில், ஏற்கனவே நமது கூட்டணி கட்சியினர் கொடிகளை உயர்த்தி காட்டியபோது பொதுமக்கள் என்னை பார்க்கும் வகையில் அவற்றை இறக்கும்படி கூறினேன். இதில் என்ன தவறு என்று தெரியவில்லை. அதனை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.
நான் திமுக அணிக்கு வருவேன் என்று எதிர்பார்த்தார்கள். அப்படி வந்தால், அதன் மூலம் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஆனால் அதற்கு எதிராக தற்போது அதிமுககூட்டணியில் நாம் இணைந்ததால் அவர்களுக்கு கடுமையான கோபம்.
மதுரைக்கு கலெக்டராக நியமிக்கப்பட்ட சகாயம், திமுக தரப்பிற்கு ஆதரவாக இருப்பார் என்று நினைத்தார்கள். அப்படி இல்லாததால் அவர் மீது ஏராளமான குறைகளை கூறுகிறார்கள்.
விலைவாசி உயர்வு என்பது மக்களின் அடிப்படை பிரச்சினை கேட்டால் ஒரு ரூபாய்க்கு அரிசி தருவதாக கூறுகிறார்கள். அந்த அரிசியை தண்ணீரில் ஊற வைத்தா சாப்பிட முடியும்? குழம்பு வைக்க தேவைப்படும் பருப்பு உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த கஷ்டம் பெண்களுக்குத்தான் அதிகம் தெரியும். தேர்தல் நெருங்கிய நிலையில் உடல்நிலை சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் சேர்ந்து உங்களிடம் அனுதாப ஓட்டுகளை வாங்க கருணாநிதி முடிவு செய்துள்ளார். அப்படி நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
தான் பட்டினியாக இருந்தாலும் கணவரும், குழந்தைகளும் நன்றாக சாப்பிட்டு நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்களை விலைவசி உயர்வு கடுமையாக கவலைப்பட வைத்துள்ளது. எரியும் அடுப்பின் அருகில் படுக்கலாம். ஆனால் பசியுடன் படுக்க முடியாது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்களை வெற்றிப்பெற செய்யுங்கள். உங்களை தேடி நான் வருவேன். தேவையானதை நிச்சயம் செய்வேன்.
எனது பிரசார பேச்சைத் திரித்து, எனக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொலைக்காட்சி தவறான செய்திகளை ஒளிபரப்புகிறது.
எனது பேச்சைக் கேட்கும் மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக நான் கொடிகளை, பேனர்களை அப்புறப்படுத்துமாறு கூறினேன். அதைத் தவறாக வெளியிடுகின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆட்சி போய்விட்டால் கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்படும் என்ற பயத்தில் அவ்வாறு தவறான பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
சிறப்பாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையத்தை கருணாநிதியும் திட்டுகிறார், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் திட்டுகிறார். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதே காரணம்.
மதுரையில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச்சென்ற ரூ. 20 லட்சத்தை எனது கட்சியினர் பிடித்துக் கொடுத்துள்ளனர். மதுரை ஆட்சியர் சகாயம் தனக்குச் சாதகமாக நடந்துகொள்வார் என அழகிரி எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. 'அஞ்சா நெஞ்சன்' எனக் கூறிக் கொள்ளும் அழகிரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். தேர்தல் அலுவலர் காளிமுத்தை அச்சுறுத்தி, முன்னுக்குப்பின் முரணாகப் பேசும்படி செய்து விட்டனர்.
கோயில் நகரான மதுரை தற்போது ரெளடிகள் சாம்ராஜ்யமாக ஆகிவிட்டது. ஏப்ரல் 13க்குப் பிறகு இந்த நிலை மாறும். ஆட்சி, அதிகாரத்தில் இருந்து திமுக அகற்றப்படும்.
ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி ஏமாற்றியவர் கருணாநிதி. ஒரு ரூபாய்க்கு அரிசி தருவதாகக் கூறுகிறார். ஆனால், ஒரு கிலோ உளுந்து ரூ. 100க்கு விற்கிறது.
1946ல் ஒரு கூட்டுறவு வங்கிக்கு அளித்த கடிதத்தில் தனக்கு ரூ. 1,000 மட்டுமே சொத்து இருந்ததாகக் கூறினார் கருணாநிதி. ஆனால், இன்றைக்கு அவருக்கு ரூ. 5 கோடி சொத்தும், அவரது மனைவி, மகள் பெயரில் ரூ. 40 கோடி சொத்தும் வந்தது எப்படி? ரூ.1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் எப்படி மறப்பார்கள்?.
மதுரையில் அடிப்படை பிரச்னைகளுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி படுகொலை, தா.கிருஷ்ணன் கொலை, பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்தில் 3 பேர் மாண்டது உள்ளிட்டவற்றில் யார் யாருக்குத் தொடர்பு என்பதை மக்கள் நன்றாக அறிவர்.
கருணாநிதி வீடா, தமிழ்நாடா என்பதை இத்தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
எனது மானசீக குருவான எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதும் முதல் பொதுக்கூட்டத்தை திருப்பரங்குன்றத்தில் தான் நடத்தினார். அதேபோல் நானும் தேமுதிக கட்சியை இதே திருப்பரங்குன்றத்தில் தான் தொடங்கினேன்.
முருகப்பெருமான், அசுரனை சம்ஹாரம் செய்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி திருட்டு, கொள்ளையடிக்கிற திமுக கூட்டணியை மக்கள் தங்கள் ஓட்டு மூலம் சம்ஹாரம் செய்ய வேண்டும். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். மக்கள் தெய்வங்களாகிய நீங்கள் தீயவர்களை கொல்ல வேண்டும்.
தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்றவே எனது மானசீக குருவான எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். மக்களாகிய நீங்களும் எனது கட்சி தொண்டர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளேன்.
நீங்கள் கூறியதை நான் கேட்டேன். அதேபோல் நான் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும். பொய்யான காட்சிகளை சித்தரித்து காட்டுகின்ற டி.விக்களை தேர்தல் வரை பார்க்காதீர்கள்.
நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு வேடங்களில் நடித்து என்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும். மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். நேர்மையான தேர்தல் அதிகாரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அது தவறா?.
முதல்வர் கலைஞர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்கிறார். தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிற மின்வெட்டு தான் எமர்ஜென்சி. காங்கிரஸ் கட்சி ஒன்றுக்கும் உதவாத கட்சி என்றார் விஜயகாந்த்.
பின்னர் விருதுநகரில் பேசிய அவர், விருதுநகர் என்றதும் நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது நடந்த நிகழ்வுகள்தான் நினைவுக்கு வருகின்றன. எனது தாயார் ஊர் விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டி. தந்தையார் ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமநாதபுரம். நான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
இன்று மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது கெப்பிலிங்கம்பட்டியில் இருந்து மாட்டு வண்டி கட்டிக்கொண்டு விருதுநகர் திருவிழாவுக்கு வருவோம். விருதுநகர் என்னுள் கலந்த ஊர்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த புண்ணிய பூமி விருதுநகர். அவர் கல்விக்கு கண் திறந்தவர். ஆனால் திமுக ஆட்சியில் கல்விக் கண்ணை கெடுத்துள்ளனர். .
விருதுநகர் வானம் பார்த்த பூமி. இங்கு தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொழிற்சாலைகள் எதையும் கொண்டு வரவில்லை.
எனக்கு ஆயிரம் கோடி கொடுத்தாலும் என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. எந்த சக்தியாலும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. நான் பணத்தை நம்பி இல்லை. மக்களின் மனதை நம்பித்தான் உள்ளேன்.
இன்று ஒரு நல்ல நாள். மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் அக்னிச்சட்டி எடுக்கும் நாள். மாரியாத்தா அருளால் தேமுதிக வேட்பாளர் பாண்டியராஜன் வெற்றி பெறுவார். எனக்கு பணம் தேவை இல்லை. பழைய சோறும், வெங்காயமும் இருந்தால் போதும் என்றார்.












Click it and Unblock the Notifications