தேர்தலுக்கு பிறகு 'தொங்கு சட்டசபை' உருவாகும்: இல.கணேசன்
சிதம்பரம்: தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் 'தொங்கு சட்டசபை'தான் அமையும் என பாஜக தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தல் வித்தியாசமான தேர்தல். 1967க்கு முன்பு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளைக் கூறி வாக்குச் சேகரித்த நிலை இருந்தது. 67க்குப் பின் கூட்டணி முறை வந்த பிறகு, தான் சார்ந்த கூட்டணியின் ஒற்றுமை, உறுதிப்பாடு குறித்தும், எதிர்கட்சிகளை விமர்சித்தும் வாக்குச் சேகரித்த நிலைமை இருந்தது.
தற்போது கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுக்குள் கட்சிரீதியாக போட்டி உருவாகியுள்ளது. தொண்டர்களிடம் ஒற்றுமை கிடையாது. தலைவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்களை பாஜக வரவேற்கிறது. இன்னும் அதிக கெடுபிடிகளை கடைப்பிடித்து அதிக வாக்காளர்கள் வாக்களிக்கவும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகாந்த் வாய் குளறி பேசி வருகிறார். தேமுதிகவுடன் கூட்டணியால் அதிமுகவிற்கு பலம் கிடையாது. கடந்த தேர்தல்களில் விஜயகாந்த் தனது பிரசாரத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக இருப்பேன், நான் முதல்வராகுவேன் என கூறினார். எம்ஜிஆர் போல் இவர் ஏதாவது செய்யப் போகிறார் என மக்கள் வாக்களித்தனர். தற்போது அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த வாக்கு சதவீதம் சரிந்துவிடும்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். திமுக குடும்ப ஆட்சி என்றால், அதிமுக மன்னார்குடி ஆட்சி.
தமிழகத்தில் 234 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகள்தான். இந்தத் தேர்தல் திமுகவிற்கு வாழ்வா சாவா என்று உள்ளது. தோல்வியுற்றால் மீண்டும் வர முடியாது. இதேபோன்றுதான் அதிமுகவின் நிலையும். விஜயகாந்த் தனது தொண்டர்கள் எங்கே ஓடிவிடுவார்களோ என பயந்துதான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்றார் கணேசன்.
7ம் தேதி கத்காரி, 10ம் தேதி அத்வானி, மோடி பிரசாரம்:
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் பிரசாரம் செய்கின்றனர்.
தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் செய்கின்றனர்.
வரும் 7-ம் தேதி பாஜகவின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி நாளை(6-ம் தேதி) முதல் 2 நாட்கள் சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். இது தவிர நடிகை பிரித்விராணியும் 8-ம் தேதி சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
வரும் 10-ம் தேதி தமிழகம் வரும் பாஜக மூத்த தலைவர் அத்வானி 2 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் மதுரை, சென்னையில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். வரும் 10-ம் தேதி தளி தொகுதியில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசுகிறார்.
வரும் 8-ம் தேதி சுஷ்மா சுவராஜ் தக்கலையில் பிரசாரம் செய்கிறார். நாளை பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications