தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த அரசும் இவ்வளவு தொகை வழங்கியதில்லை-ராகுல்
சென்னை: தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த மத்திய அரசும் இவ்வளவு தொகை வழங்கியதில்லை என்று ஈரோட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு வந்தார். ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி மைதானத்தில் ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழகத்துடனும், தமிழர்களுடனும் பின்னிப் பிணைந்த பாசமும், உறவும் என் குடும்பத்துக்கு உண்டு. இந்த பிணைப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
ஏழு ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணியை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழக அரசும், மத்திய அரசும் ஏழை மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட அரசுகளாக உள்ளன. 2004ம் ஆண்டு முதல் ஏழை மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட சிறப்பு திட்டங்களை தீட்டி வருகிறோம்.
இந்தியாவாக இருந்தாலும், தமிழகமாக இருந்தாலும், இதற்கு முன் இவ்வளவு வளர்ச்சியை கண்டதில்லை. இந்த வேகம் போதுமானதா என்றால், போதாது.
தமிழகத்தில் ஜவுளி, என்ஜினியரிங் துறைகள் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஜவுளித் தொழிலில் ஈரோடு முக்கிய நகரமாக திகழ்கிறது. இந்த நகரின் வளர்ச்சிக்கு, அடிப்படை கட்டுமான வசதிகளான சாலை, மின்சாரம், வடிகால் போன்றவை முக்கிய தேவைகள். சாயக்கழிவு பிரச்சனையும் இங்கு நீடிப்பதை நான் அறிவேன். தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து கழிவுநீர் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து பாடுபடுகின்றன. தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாயை வழங்கியுள்ளது. இதற்கு முன் எந்த அரசும் இவ்வளவு அதிகமான தொகையை தமிழகத்துக்கு ஒதுக்கியது இல்லை.
பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் இன்னும் அதிகமான தொகையை எதிர்காலத்தில் தமிழகத்துக்கு வழங்க தயாராக உள்ளனர்.
கல்வி, சுகாதாரம், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றில் தமிழக அரசு சிறப்பான இடம் பிடித்துள்ளது. மதிய உணவுத் திட்டம், கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்ட அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியது போன்ற நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த நல்ல திட்டங்களை எப்படி செயல்படுத்த முடிந்தது?. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரிடையே நிலவும் ஒருமித்த கருத்தால் தான் இதை நிறைவேற்ற முடிந்தது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிறைவேற்றும் திட்டங்களை பார்த்து, மற்ற மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்புகள் அதை பின்பற்றுகின்றன. 16 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினராக இணைந்துள்ளனர். அதில் 10 பேர் சட்டசபைக்கு வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். எதிர்காலத்தில் தமிழக அரசியலில் இளைஞர் காங்கிரஸ் முக்கிய இடம் வகிக்கும் என்றார் ராகுல்.
இதையடுத்து ஹெலிகாப்டரில் கரூர் சென்ற அவர் திருவள்ளூர் மைதானத்தில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவாக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் காமராஜ், குளித்தலை திமுக வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்துப் பேசினார்.
கரூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவர் ஹெலிகாப்டரில் காரைக்குடி புறப்பட்டார். அங்கு பாண்டியன் தியேட்டர் எதிர்புறம் உள்ள திடலில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
காரைக்குடி மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் இன்றிரவு தங்கும் அவர் நாளை காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் சென்று காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் சாமிக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
விளாத்திக்குளத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதியம் புதுச்சேரிக்கு செல்கிறார்.
பிரதமரும் வருகிறார்:
காங்கிரஸ் -திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் வரும் 9ம் தேதி கோவையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications