மானசரோவர் புனித யாத்திரை செல்ல இந்துக்களுக்கு உதவி-ஜெயலலிதா

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதுகுளத்தூர், காரைக்குடி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து விட்டு, மாலையில் பரமக்குடிக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு உங்களை சந்திக்க இங்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டு, உயர்ந்து நிற்கும் விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடிகள் தொந்தரவு, கள்ளச் சாராயம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். இந்த தேர்தலில் தமிழ்நாட்டை மீட்க முடியாது என்றால் எப்போது மீட்கப்போகிறோம்?
இந்த ஆட்சியின் ஒரே சாதனை தமிழ்நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றது தான்.
தமிழக சிறுபான்மை சமூக மக்கள் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளனர். அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் இந்த நிலை மாற்றப்படும்.
தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்த நிலங்கள் மீட்கப்பட்டு இஸ்லாமிய சமுதாயத்தினர் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இஸ்லாமியர்களின் கோரிக்கையை பதிவு செய்வது போல், கிறிஸ்தவர்களின் கோரிக்கையும் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு உதவி செய்வது போல, கிறிஸ்தவர்களின் இஸ்ரேல் புனித யாத்திரைக்கு உதவி செய்வது போன்று, சீனாவில் உள்ள மானசரோவர் புனித யாத்திரைக்கும், நேபாளத்தில் சாளகிராமம் புனித யாத்திரைக்கும் இந்துக்களுக்கு உதவி செய்யப்படும்.
கேபிள் டி.வி. அரசு உடைமையாக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் கேபிள் வசதி வழங்கப்படும். முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சூரிய ஒளி மூலம் மின் வசதி, நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்?. தேச விரோத சக்திகளோடு கூட்டணி சேர்ந்து செயல்படும் கருணாநிதி தமிழகத்தை ரூ.1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்க வைத்திருக்கிறார்.
ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற பொன்னான வாய்ப்பளிக்கும் நாள்தான், வர இருக்கும் தேர்தல் நாள். பேராசைக்காரக் கூட்டம் தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருப்பதைத் தடுக்கும் நாளாக அந்த நாள் இருக்க வேண்டும்.
எத்தனை கோடி என்றே கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் கருணாநிதியின் குடும்பமும் ஒன்றாகிவிட்டது. தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர்தான் கருணாநிதி.
தமிழகத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். கருணாநிதியின் சூழ்ச்சியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.
ஜனநாயக நாட்டில் தமிழகத்தைச் சுரண்டும் கும்பலை விரட்டியடிக்க தேர்தல் ஒன்றுதான் சிறந்த வழி என்பதால் வர இருக்கும் தேர்தல் நாளன்று அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications