மே 13ம் தேதிக்குப் பிறகு திமுகவினரின் கணக்குப் பார்க்கப்படும்-தா.பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

Tha Pandian
கோவை: மே 13ம் தேதி மக்களுடைய ஆட்சி மலரும். அதன் பின்னர் திமுகவினரின் கணக்கு பார்க்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கோவையில் நேற்று அதிமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தா.பாண்டியன் பேசியதாவது:

இன்றிலிருந்து 7வது நாள் வாக்குப் பதிவு செய்ய வேண்டிய நாள். இங்கு வந்திருக்கும் அனைவருமே வாக்காளர்கள். உங்களை மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன், முதலில் உங்களது வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். அடுத்து குடும்பத்தாரின் வாக்குகளைப் பதிவு செய்து முடிக்க வேண்டும். தொடர்ந்து தெருவில் உள்ள அனைவருடைய வாக்குகளையும் பதிவு செய்து முடித்த பிறகுதான் நீங்கள் காலை உணவுக்கே செல்ல வேண்டும்.

உங்களது இந்தக் கடமையைச் செய்யத் தவறினால், வயலில் விளைந்த நெல், களத்திலிருந்து வீடு வந்து சேர வேண்டும். அதை இடையே தட்டிப் போகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எனவே கடைசி நிமிடம் வரை நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மக்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள். அதை முறைப்படி முத்திரை குத்தி, அதை எண்ணி, சட்டப்படி முடிவை அறிவிக்க வேண்டும். ஏப்ரல் 13ம் தேதி முத்திரை குத்துகிறார்கள். மே 13ம் தேதி தீர்ப்பை அறிவிக்கிறார்கள். மே 13ம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் தீர்ப்பு வெளியாகி விடும்.

தென்கோடி முதல் உச்சி மலை வரை போய் விட்டு வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் வெற்றிச் செய்தி தொடர்ந்து வெளி வரும். மே 13ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சி அமைகிறது என்ற செய்தி உங்களிடம் வந்து சேரும். அது மக்களால் எடுக்கப்பட்ட முடிவு. எழுதப்பட்ட தீர்ப்பு. அதை தடுக்கவோ, திருத்தவோ, உலகத்தில் எந்த சக்தியும் இல்லை. காரணம், இந்த மகா கூட்டணியின் மகத்தான பலன் இது.

நீண்ட நெடுங்காலம் கலைஞர் ஆட்சி புரிய மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு திமுக அரசு தந்தது என்ன, பெரும் தலைக்குனிவு. அவமானத்தைத்தான் தந்துள்ளது திமுக அரசு. எனவேதான் புதர் மண்டிக் கிடக்கும் தமிழகத்தை மீட்க இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளோம்.

தமிழகத்தில் நெறிமுறைகள் இன்று குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன. மனித உயிருக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை. உயர்நீதிமன்றத்திற்குள்ளேயே புகுந்து உயர்நீதிமன்ற நீதிபதியையே தாக்குகிறார்கள். அப்படிப்பட்ட அருமையான ஆட்சி, கலைஞருடைய ஆட்சி. அவருடைய காலத்தில்தான் இது நடந்தது. இனியும் இதை தொடர அனுமதித்தால் தமிழகம் தாங்காது. முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்றார்கள். நல்ல கதாநாயகியாக வெளியிட்டிருக்கிறார்களே, கதாநாயகன் யார் என்று தேடினால், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் இருக்கிறார். அவர்தான் கதாநாயகன். தமிழகத்திலே தேர்தல் நடக்கிறது. கொள்கையைச் சொல்ல வேண்டியவர், அதைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டியவர் திஹார் சிறையிலே இருக்கிறார். கதாநாயகி இங்கே அலைந்து கொண்டிருக்கிறார், முகவரி எங்கே என்று தேடி.

20 பக்கங்களில் தேர்தல் அறிக்கையை நீண்ட காலம் உழைத்து உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ராசா, சாதாரண ராசாவா அவர், ஆண்டிமுத்து ராசா, ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மாயமாய் அடித்த மகா மனிதன்.

ஒருவர் திஹார் சிறையில் இருக்கிறார். இன்னொருவர் மதுரையில் முன்ஜாமீனில் இருக்கிறார். இந்த லட்சணத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அப்புச்சி, வட்டிக் கணக்குப் பார்த்தே பழகியவர். இப்போது தகாத இடத்தில் போய்ச் சிக்கிக் கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவு வரும்போது தெரியும், கூட்டுச் சேர்ந்துள்ள இந்த இரு கட்சிகளும், உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று முட்டிக் கொள்வார்கள். அப்போது மக்கள் சொல்வார்கள், இவர்களால்தான் நாடே கெட்டது என்று.

இப்படிப்பட்ட கொள்ளையர்களிடமிருந்தும், கொலைகாரர்களிடமிருந்தும் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி நம்மை மீட்டதே என்று நமக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.

கோவையில் மின் வெட்டு காரணமாக பஞ்சாலைகள் அத்தனையுமே இழுத்து மூடப்பட்டுள்ளன. விசைத்தறிகள் ஓடவில்லை. ஆற்காட்டாருக்கு ஏன் சீட் தரப்படவில்லை என்று கேட்டால் வயதாகி விட்டது. கோ.சி.மணிக்கு ஏன் சீட் தரப்படவில்லை என்று கேட்டால் வயதாகி விட்டது. இவர்களுடன் போட்டி போடுகிறாரே முதல்வர் என்று கேட்டால், முதல்வருக்கு வயதே ஆகாது. 7வது தலைமுறைக்கும் முதல்வர் பதவியில் அமர்த்த பேரன், பேத்திகளை வைத்துள்ளார் கருணாநிதி. தமிழர்கள் ஏமாந்தவர்கள் என்று நினைக்கிறார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

2011ம் ஆண்டில்தான் நாம் இவரைப் பற்றி இவ்வளவு பயங்கரமான ஆளா என்று என்கிறோம். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பே இவரை சரியாக மதிப்பிட்டு, அப்புறப்படுத்த, இரட்டை இலையைக் காட்டியவர் எம்.ஜி.ஆர். இவரைக் கோட்டையிலிருந்து பலமுறை இறக்கிக் காட்டியவர். மீண்டும் அவரது ஆட்சி மலர வேண்டும். குமரி முதல் சென்னை வரை உள்ள மக்கள் அந்த முடிவை எடுத்து விட்டனர்.

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்பி வர வேண்டுமா, நிர்வாகத்தை நடத்தக் கூடிய ஒருவரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். பேட்டை ரவுடிகளின் வேட்டைக் காடாக தமிழகத்தை மாற்றி விட்டார் கருணாநிதி.

கருணாநிதி ஆட்சியிலே இலவசமாக டிவி கொடுத்தார்கள். அதற்கு மதுரையிலிருந்து ஒரு தம்பி கம்பி கொடுத்தார். சென்னையிலே ஒருவர் காது குத்தினார். வருடத்திற்கு ரூ. 4800 கோடி வருமானம், யாருக்கு அரசுக்கு அல்ல, கருணாநிதி குடும்பத்துக்கு. அதற்குத்தான் அதிமுக தேர்தல் அறிக்கையிலே சொல்லியுள்ளனர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் டிவிகள் அரசு வசமாகும் என்று.

கோபாலபுரம் வீட்டில் குழாய் மூலம் 200 கோடி, 200 கோடி என்று மொத்தம் ரூ. 400 கோடி கொட்டிக் கொண்டிருக்கிறதே, அதைத்தான் அதிமுக சொல்லியுள்ளது, அந்தக் குழாய் இனி அரசு கஜானாவுக்குத் திருப்பப்படும் என்று. அது இனி மக்களுக்குக் கிடைக்கும். தனியார் கொள்ளை தடுக்கப்படும். இந்த ஒன்றை செய்வதற்காகவாவது இரட்டை இலைக்கு மூன்று முறை வாக்களிக்கலாம்.

அதேபோல தேர்தல் அறிக்கையிலே சொல்லியுள்ளது போல கண்டிப்பாக தமிழக மக்களுக்கு லேப்டாப் கொடுங்கள். அப்போதுதான் நீரா ராடியாவின் பேச்சுக்களை நாம் கேட்க முடியும். நீரா ராடியா, ராசாத்தியோடும் பேசுகிறார், ரத்தன் டாடாவோடும் பேசுகிறார், ராசாவுடனும் பேசுகிறார், மறக்காமல் கனிமொழியோடும் பேசுகிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டை தமிழக மக்கள் கேட்டிருக்கிறார்கள். நீரா ராடியாவின் இசையையும் கேட்டு அவர்கள் மகிழ வேண்டும்.

எஞ்சியுள்ள 7 நாட்களும் கவனமாக இருக்க வேண்டும். வாக்களித்த பிறகு ஊர் எல்லைகளில் காவல் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். 13ம் தேதிக்குப் பிறகு மக்களுடைய ஆட்சி அமையும். அதன் பிறகு திமுகவினரின் கணக்கு பார்க்கப்படும் என்றார் தா.பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+