Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலெக்டர் சகாயம் ஆட்சி மாற்றம் தேவை என்று பேசவில்லை-உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை கலெக்டர் சகாயம், ஆட்சி மாற்றம் தேவை என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், சகாயத்தை இடமாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீசந்தனா காளியம்மன் மகளிர் மேம்பாட்டுக்குழுவின் தலைவி சத்தியவாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,

மதுரை மாவட்ட கலெக்டர் பதவியில் இருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி சகாயம், மதுரையில் உள்ள கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது மாணவர்களிடையே, இந்த தேர்தல் மூலம் மாற்றங்கள் வரவேண்டும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் வாக்களிக்க வலியுறுத்துங்கள்' என்று கூறி வருகிறார். அவர் அப்படி பேசியது பல்வேறு பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது.

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த வேண்டிய இவர் இப்படி பேசுவது, தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது. மறைமுகமாக எதிர்க்கட்சிக்கு சாதகமாக பேசுவது தவறானது. எனவே சகாயத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்த கலெக்டர் சகாயம் தன் மீதான புகார்களை மறுத்தார். மேலும், தேர்தல் ஆணையமும், தேவையில்லாமல் சகாயம் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்திருந்தது. அவரை வேண்டும் என்றே குறி வைத்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.

மேலும், கடந்த முறை விசாரணையின்போது, மதுரையில் சகாயம் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.கள் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். தேர்தல் கமிஷன் தரப்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார்.

அப்போது நீதிபதி சிவஞானம் கூறுகையில்

இந்த வழக்கில் சகாயம் பேசியதாக தரப்பட்ட 4 சி.டி.களையும் போட்டு பார்த்தேன். அவரது பேச்சை சம்பந்தப்பட்ட பத்திரிகைதான் தவறாக பிரசுரித்துள்ளது. அவர், 100 சதவீதம் அன்பளிப்பு இல்லாமல் வாக்களியுங்கள்' என்றுதான் பேசியிருக்கிறார்.

அவர் தேர்தல் விழிப்புணர்வு பற்றித்தான் பேசினார். பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அந்த செய்தி வந்த பத்திரிகையையும் படித்துப் பார்த்தேன். சகாயம் சொல்ல வந்த கருத்தை வேறுவிதமாக அதில் வெளியிட்டிருந்தனர்.

அனைத்து கூட்டங்களிலும், மாணவர்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார். தேர்தலில் நாங்கள் லஞ்சம் வாங்காமல் வாக்களிப்போம். இதையே எங்கள் பெற்றோரிடமும் வலியுறுத்துவோம்' என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதைவிட, வக்கீலாவது நல்லது என்றும் கூட்டங்களில் சகாயம் பேசி இருக்கிறார்.

அவரது பேச்சில், இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்' என்று குறிப்பிடவில்லை. லஞ்சம் பற்றிய மக்களின் மனநிலையிலும், சமுதாயத்திலும்தான் மாற்றம் வரவேண்டும் என்றுதான் அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு முழுவதையும் கேட்டேன். அவரது பேச்சுக்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது. மைதானம் முழுவதும் மாணவர்கள் ஏராளமான அளவில் கூடியிருந்தனர் என்றார்.

அப்போது வக்கீல் பிரபாகரன் கூறுகையில், பத்திரிக்கைச் செய்தியை வைத்துத்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தோம். கலெக்டரை குற்றப்படுத்தும் நோக்கில் தொடரவில்லை என்றார்.

அதன் பின்னர் நீதிபதிகள் உத்தரவைப் பிறப்பித்தனர். அதில்,

பணம், பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கக்கூடாது என்பதையும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்கு அந்த கூட்டங்களில் கருத்து பரிமாறப்பட்டதாக சி.டி.களை பார்த்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுகள் விற்பனைக்கல்ல என்பதையும் இது தொடர்ந்தால் எதிர்காலத்துக்கு நாமே டைம்பாம்' வைப்பது போன்றதாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார்.

மாணவர்களை பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வது பற்றியே அவரது பேச்சு இருந்தது என்பதையும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். எனவே மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்குள் அவரது பேச்சை கொண்டுவர முடியாது.

அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக அணுகுவதற்காக ஆய்வு செய்து, அதனடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மக்களிடையே தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 100 சதவீத வாக்களிப்பு, வாக்களித்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களை தேர்தல் கமிஷன் செயல்படுத்துகிறது.

இதற்காக மாவட்டம் தோறும் மக்களை சந்திப்பது அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பணியில் ஒன்றாக உள்ளது.

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனின் காட்டியுள்ள முறைகளின் ஒன்றுதான் கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்துவதாகும். இதற்காக மாவட்டம் தோறும் ரூ.50 ஆயிரத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆவணப்பதிப்பாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் கருத்துகளை வெளிப்படுத்தும் ஸ்லோகன்'களை மக்களிடையே பிரபலமாக்க வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கடமையாகவும், பொறுப்பாகவும் வந்துவிடுகிறது.

எனவே சகாயம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் எதுவும் ஆதாரமற்றவை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே சகாயத்திற்கு எதிராக ஆர்டிஓ ஒருவர் கூறிய புகார்களை நிராகரித்த தேர்தல் ஆணையம் அந்த ஆர்டிஓவை சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் சகாயம் பேசியதில் தவறில்லை என்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலேயே தனது சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். இவர் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது அந்த மாவட்ட மக்களின் அன்பையும், ஆதரவையும் அமோகமாக பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+