கோரிக்கைகளை அரசு ஏற்றது; உண்ணாவிரதத்தை இன்று வாபஸ் பெறுகிறார் அன்னா ஹஸாரே!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: தனது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், இன்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார்.

காந்தியவாதியும், பிரபல சமூக சேவை ஆர்வலருமான அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் ஊழலுக்கு எதிராக தற்போது தயாரிக்கப்பட்டு உள்ள லோக்பால் சட்ட வரைவு மசோதாவினால் எந்த பயனும் இல்லை என்றும், அந்த சட்ட மசோதாவை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் குழுவுக்கு மூத்த மந்திரி தலைமை தாங்கக் கூடாது என்றும், ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், சமூக நலச் சங்க பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்பது அவருடைய முக்கிய கோரிக்கையாகும்.

இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி கபில் சிபல் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை அவர் ஹஸாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லோக்பால் சட்ட மசோதாவை ஆய்வு செய்ய மத்திய மந்திரிகளும், சமூக நலச்சங்க பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டு குழு அமைப்பது தொடர்பாக அதிகாரபூர்வ அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை கபில் சிபல் ஏற்க மறுத்துவிட்டார்.

13-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம்

பின்னர் பேட்டி அளித்த அன்னா ஹஸாரே, தனது கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ம் தேதி அன்று நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தும்படி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அன்னா ஹசாரேயின் போராட்ட அழைப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்தார். மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

பின்னர், நேற்று மாலை 6 மணிக்கு மத்திய மந்திரிகள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரை அன்னா ஹசாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது இரு தரப்பினரும் லோக்பால் மசோதா குறித்த தங்கள் வரைவு திட்டத்தை பரிமாறிக்கொண்டனர். கபில் சிபல் அளித்த வரைவு திட்டத்தை ஹசாரேவிடம் அவரது பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.

அதை ஆய்வு செய்த ஹசாரே, லோக்பால் மசோதாவை தயாரிக்க அமைக்கப்படும் கூட்டுக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியைத்தான் நியமிக்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தார். வேண்டுமானால், ஒரு மத்திய அமைச்சரை இணைத் தலைவராக நியமித்துக்கொள்ளலாம் என்று அவர் இறங்கி வந்தார். ஆனால், தனது மற்ற கோரிக்கைகளில் சமரசத்துக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.

உண்ணாவிரதம் வாபஸ்

இதற்கு நேற்று இரவு 9.30 மணி வரை, மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஹஸாரே முதலில் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பின்னர் தெரிய வந்தது.

லோக்பால் மசோதாவை ஆராயும் கூட்டுக்குழுவின் இணைத் தலைவராக சட்ட நிபுணர் சாந்தி பூஷன் இருப்பார் என்றும், அதன் உறுப்பினர்களாக அன்னா ஹசாரே, பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இருப்பார்கள் என்றும், அறிவிக்கப்பட்டது. இக் குழுவின் தலைவராக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியும், உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, கபில் சிபல், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோர் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிக்கை, இன்று காலை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இதனால், இன்று காலை 10.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அன்னா ஹசாரே அறிவித்தார். ஆனால் அதற்குள், மத்திய அரசின் ஒப்புதல் எழுத்துப்பூர்வ உத்தரவாக வரவேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

உடல்நிலை

இதற்கிடையே, ஹசாரேவின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் மன உறுதி குலையாமல் அவர் இருந்து வருவதாக அறிவித்து உள்ளனர். 76 மணி நேர உண்ணாவிரதத்துக்குப்பின் அவருடைய உடல் எடை 2.5 கிலோ குறைந்தது.

ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருந்தவர்களில் 2 பேர் நேற்று காலை திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுடைய உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+