திமுகவின் சாதனைகள் வெற்றிக்கு வழி வகுக்கும்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கும் தெம்பு திமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் பேசுகையில்,

தேர்தலுக்காக மட்டும் அல்ல எந்த சூழ்நிலையிலும் எப்போதும் உங்களோடு இருந்து உங்களுக்காக தொண்டாற்றுபவர்கள் நாங்கள். கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் கருணாநிதி 50 ஆண்டு கால திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது மட்டுமின்றி கடந்த முறை தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நூற்றுக்கு நூறு நிறைவேற்றினார் என்பதை நாடும், மக்களும் அறிவார்கள்.

உங்கள் அன்போடும் ஆதரவோடும் நான் 2 முறை சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அப்போது நானே நேரில் வந்து திட்டங்களை ஆய்வு செய்து உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறேன். மழை, வெள்ளம் என்றாலும், தீ விபத்து என்றாலும் ஓடோடி வந்து உங்களுக்கு உதவி இருக்கிறேன்.

சென்னை மாநகராட்சி சார்பில் 10 பாலங்களும் கட்டப்பட்டன. அவற்றுள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெரம்பூர் மேம்பாலம் மட்டும் கட்டப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டடது. இப்போதும் பல கோடி ரூபாய் செலவில் மேம் பாலங்கள் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுபோன்று அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள திட்டப்பணிகள் தொடர வேண்டுமானால் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள் முழு ஆதரவு தர வேண்டும்.

வரும் 13ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில், மீண்டும் தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும் வகையில் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி என்னென்ன திட்டங்களை நிறைவேற்றினார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

சென்னையில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், சமூக நலக்கூடங்கள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்போது, நிரந்தரமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் என்ற மெகா திட்டத்தை தொடங்கியுள்ளோம். ரூ.15,000 கோடி செலவிலான இந்த திட்டப் பணிகள் 15 சதவீதம் முடிவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தால் வெளிநாட்டையே மிஞ்சும் அளவுக்கு சென்னை நகரம் மாறும்.

கூவம் சீரமைப்புத் திட்டம் பற்றி எதிர்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த திட்டத்திற்காக குடிசைகளை அகற்றப் போகிறோம் என்று பிரசாரம் செய்கின்றனர். அது போன்ற செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்று உறுதி அளிக்கிறேன். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகளை எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக அகற்ற மாட்டோம்.

செய்யப் போவதை சொல்லியும், செய்ததை சொல்லியும் ஓட்டுக் கேட்கும் தெம்பும், திராணியும் திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. அந்த நிலையில் இருந்து உறுதி அளிக்கிறேன். தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் எந்தச் சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் மக்களுக்காக பணியாற்றுவோம். அந்த உரிமையில்தான் உங்களிடம் வந்து ஓட்டுக் கேட்கிறோம்.

சில கட்சித் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். அம்மையார் ஜெயலலிதா, கலைஞரையும், அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகிறார். மணலை கயிறாகத் திரிப்போம் என்பதுபோல வாக்குறுதி அளிக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்படுவார். மற்ற நேரங்களில் கோடநாடு சென்று விடுவார்.

இப்போது அவருடன் புதிய ஜோடி ஒன்று (விஜய்காந்த்) சேர்ந்திருக்கிறது. மிக அருமையான ஜோடி. ஜெயலலிதா திரைப்படங்களில் நடிக்கும் போது இவர் இல்லாமல் போய்விட்டார். விஜயகாந்த் அவரது கட்சி வேட்பாளரை பொதுமக்கள் மத்தியில் அடித்தது நமக்கெல்லாம் தெரியும். முதல் நாள் அடி.

2ம் நாள் அதிமுக கொடி பிரச்சனை. அதிமுக கொடியை அகற்றச் சொல்லி தகராறு செய்தார். அதற்கு அடுத்த நாள் குடி பிரச்சனை. அதாவது 'ஆப்' அடித்து வந்து நமக்கு ஆப்பு அடிப்பாராம்.

இப்படியும் ஒரு தலைவர் தமிழகத்தில் உலவிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல்வர் கருணாநிதி மீது பொதுமக்களுக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கிறது. 2006 தேர்தலின் போது ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்க முடியாது. இது சாத்தியமில்லை. இரண்டு தடவை முதல்வராக இருந்தவர் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்குவதற்கு நிதி ஆதாரம் இடம் தராது என்று கூறினார்.

ஆனால், முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், கோட்டைக்கு கூட போகாமல் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட மேடைக்கே கோப்புகளை வரவழைத்து, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்திற்குத்தான் முதல் கையெழுத்து போட்டார். விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். சத்துணவில் 5 நாட்கள் முட்டை, திருமண உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை என்பன போன்ற பல திட்டங்களை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000த்தில் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும், திருமண உதவித் தொகை ரூ.25,000த்தில் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தித் தரப்படும், முதியோர் உதவித் தொகை ரூ.750 ஆக அதிகரிக்கப்படும், 58 வயதானவர்கள் வீட்டில் சாய்வு நாற்காலியில் இருக்காமல், நினைத்த நேரத்தில் பேரன், பேத்தி, மாமன், மச்சான் போன்ற சொந்த பந்தங்களைப் போய் பார்த்து வருவதற்காக அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் என்பது போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவேன் முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலே முதல் இடத்தில் இருக்கின்றன. இந்த குழுக்களுக்கு சுழல்நிதி, வங்கிக் கடன், பொருளாதாரக் கடன் என்று ஏராளமாக கடன் வழங்கி இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதாரக் கடன் ரூ.2.5 லட்சமாக வழங்கப்பட்டது. இது, ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, அந்தத் தொகையில் ரூ.2 லட்சம் அரசு மானியமாகவும் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இப்படி திட்டங்களை, சாதனைகளை தொடர்ந்து முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்வதற்கு முதல்வர் கருணாநிதி 6வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து தான் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்து அவர் பேசுகையில், தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் கருணாநிதி மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்திட நீங்கள் துணை நிற்க வேண்டும். இந்தத் தேர்தல் திமுக ஆட்சி தொடர நடத்தப்படும் தேர்தல் ஆகும்.

கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஆகும். இந்த புதிய தொகுதியில் உங்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். அதிக ஓட்டு எண்ணிக்கையில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்த தொகுதியில் பல இடங்களில் பட்டா வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளதாக சொன்னார்கள். இங்கு என்னென்ன பிரச்சனைகள், என்னென்ன குறைகள் உள்ளதோ அவற்றை எல்லாம் தீர்க்க முழு முயற்சி எடுப்பேன். நான் ஏதோ பிரசாரத்திற்காக இப்படி சொல்கிறேனோ என்று கருதாதீர்கள். அதிமுகவைப் போல் அல்ல திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுக்கின்ற கட்சி திமுக நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்றார்.

ஜெ. குறித்து அவதூறுப் பேச்சு-ஸ்டாலினுக்கு நோட்டீஸ்:

இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக வந்த புகார்களைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு இருவரும் பதிலளித்து விட்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் அவதூறாகப் பேசியதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+