உத்திரமேரூரில் வெல்லப் போவது யார்?-மக்களிடையே பெரும் ஆர்வம்!

எந்த ஊரையும் விட உத்திரமேரூரில்தான் தேர்தல் களம் படு சூடாக காணப்படும். யார் இங்கு வேட்பாளராக நிற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. மாறாக, இங்கிருந்து வெல்லப் போகும் கட்சி எது என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பாகவும் இருப்பது இங்கு வழக்கம்.
உத்திரமேரூரில் 1952ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை - 1957ம் ஆண்டைத் தவிர- இங்கு எந்தக் கட்சி வெல்கிறதோ, அக்கட்சிதான் கோட்டையைப் பிடித்து ஆட்சியமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
1952ம் ஆண்டு இத்தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசாமி முதலியார் வெற்றி பெற்றார். அந்த முறை மாநிலத்தில் ஆட்சியமைத்தது காங்கிரஸ்.
இடையில், 1957ல் மட்டும் வி.கே.ராமசாமி முதலியார் என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
1962ல் காங்கிரஸ் கட்சியின் ஓ.சீனிவாச ரெட்டியார் வென்றார். ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்.
1967ல் முதல் முறையாக திமுக இங்கு வெற்றிக் கனியைச் சுவைத்தது. அக்கட்சியின் கே.எம்.ராஜகோபால் வெற்றி பெற்றார். அந்த முறை ஆட்சியைப் பிடித்தது திமுக.
1977ல் அதிமுகவைச் சேர்ந்த பக்கூர் சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். அந்த முறை ஆட்சியைப் பிடித்தது அதிமுக.
1980 அதிமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார். மீண்டும் ஆட்சியமைத்தது அதிமுக.
1984ல் நடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த நரசிம்ம பல்லவன் வெற்றி பெற்றார். இந்த முறையும் ஆட்சியைப் பிடித்தது அதிமுகதான்.
1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் கே.சுந்தர் வென்றார். மாநிலத்தில் ஆட்சியமைத்தது திமுக.
1991ல் அதிமுகவின் காஞ்சி பன்னீர்செல்வம் வெல்ல, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அதிமுக.
1996ல் நடந்த தேர்தலில் திமுகவின் கே.சுந்தர் வெல்ல, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைத்தது திமுக.
2001ல் அதிமுகவின் வி.சோமசுந்தரம் வெல்ல, மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைத்தது அதிமுக.
கடந்த 2006ல் திமுக மீண்டும் இங்கு வென்றது. மாநிலத்திலும் ஆட்சியமைத்தது.
இப்படி இங்கு யார் வெல்கிறார்களோ, அவர்கள் சார்ந்த கட்சிகள்தான் ஆட்சியமைத்து வருவதால் உத்திரமேரூர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதியாக மாறியுள்ளது. இங்குள்ள மக்கள் அளிக்கும் தீர்ப்பு, ஒட்டு மொத்த மாநிலத்தையும் கட்டியாளப் போவது யார் என்பதை நிர்ணயிப்பதாக உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் மட்டுமல்லாமல், அத்தனை பேரும் ஆச்சரியத்துடன் பேசுகின்றனர்.
இருக்காதா பின்னே. உத்திரமேரூரின் கடந்த கால வரலாறு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை அளிக்கும் ஒன்றாகும்.
1100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் ஆட்சியின்போது குடவோலை முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்தினர். அது உத்திரமேரூர் கோவில் கல்வெட்டுக்களில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே ஜனநாயக முறைப்படி தமிழர்கள் அக்காலத்தில் தேர்தல் நடத்தியுள்ளதையும் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் நிரூபிப்பதாக உள்ளன. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலில் இந்த கல்வெட்டுக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட பெருமை கொண்ட உத்திரமேரூரில் இந்த முறை திமுக சார்பில் பொன் குமாரும், அதிமுக சார்பில் கணேசனும் களத்தில் நிற்கின்றனர். இவர்களில் யார் வெல்கிறார்களோ அவர்கள் சார்ந்த கட்சியே அடுத்து ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். அதேபோல இந்த இரு வேட்பாளர்களும் தமது கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற தாங்கள் காரணமாக இருக்க வேண்டும் என்ற வேகமும் உள்ளது.
உத்திரமேரூர் உரைக்கப் போவது என்ன?, ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கப் போவது யார்? மே 13ம் தேதி தெரியும்!












Click it and Unblock the Notifications