மே 13ல் 94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை-துணை ராணுவப் பாதுகாப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13ம் தேதி நடைபெறுகிறது. 94 மையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு துணை ராணுவப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வன்முறை ஏதும் இல்லாமல் முடிந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மொத்தம் 9 4 மையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்து அந்த அறைகள் சீலிடப்பட்டுள்லன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
துணை ராணுவப் படையினர் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சிறப்புக் காவல் படையினர், உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ண ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் காக்கப்படவுள்ளது.
இந்த மையங்கள் அனைத்திலும் ரகசியக் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. யாரும் உள்ளே ஊடுறுவி விடாமல் தடுக்க இந்த ஏற்பாடு.
வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு டி.எஸ்.பி., ஒரு துணை ராணுவ அதிகாரி, தாசில்தார் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டு உள்பட 14 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
94 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை செய்வார்கள். மின்னணு எந்திரங்கள் உள்ள பகுதிகளைச் சுற்றி இருக்கும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பும் நடந்து வருகிறது. இவர்கள் தவிர அரசியல் கட்சி பிரமுகர் களின் ஏஜெண்டுகளும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் அருகே காவலுக்கு உள்ளனர்.
சென்னைக்கு 3 மையங்கள்
சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications