4 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு-தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்
சென்னை: தமிழகத்தின் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 121, 122, 123 ஆகியவற்றில் நேற்று காலை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 122வது வாக்குச்சாவடியில் அப்பகுதியை சேர்ந்த முற்றத்துமாமூடு, கைசூண்டு, தாந்தவிளை ஆகிய பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இங்கு மொத்தம் 767 வாக்குகள் பதிவாகியிருந்தது. இறுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கும்போது 731 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. 36 வாக்குகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. உடனே அங்கிருந்த பாஜக ஏஜென்டுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாஜகவினர் அந்த வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மொத்தம் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளது. இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு இடத்திலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதால் அதுபற்றி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவோம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சமத்திகுப்பம் உள்பட 2 வாக்குச் சாவடிகளில் இரண்டு பிரிவினர் இடையே மோதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த 4 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடைபெறும். அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார் அவர்.
கள்ள ஓட்டு இல்லை
முன்னதாக நேற்று பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அடையாள அட்டை வைத்திருக்கும் பலராலும் ஓட்டுப்போட முடியாமல் போய்விட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் பலமுறை நினைவூட்டினோம். அதற்குப் பிறகும் பெயர் இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்யாவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இந்த தேர்தலில் கள்ள ஓட்டு ஏதும் பதிவாகவில்லை.
யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் 49 ஓ' என்று எழுதி பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அந்த வகையில், எத்தனை பேர் அவ்வாறு கையெழுத்து போட்டுள்ளார்கள் என்பது நாளை (14.04.2011) தெரிய வரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications