அசன் அலி பாஸ்போர்ட்: புதுச்சேரி ஆளுநருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-விரைவில் விசாரணை

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அசன் அலி கான் (57), புனேவில் குதிரை பண்ணை நடத்தி வருவதோடு பெரும் ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் உள்பட பல வெளிநாட்டு வங்கிகளில் இவர் பல லட்சம் கோடியளவுக்கு பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளார். இது குறித்து மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலி மற்றும் அவரது பார்ட்னரான காசிநாத் தபுரியாவும் ஆகியோர் ரூ. 75,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இவருக்கும் தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இந் நிலையில் அசன் அலி மற்றும் தபுரியா இருவரையும் கடந்த மாதம் அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர்.
அசன் அலிகான் கடந்த 1997ம் ஆண்டு பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் தந்து பாஸ்போர்ட் பெற்றார். பிகாரைச் சேர்ந்த அரசியல்வாதியான அபிலேந்து பாண்டே என்பவர் இந்த பாஸ்போர்ட்டை 7 நாளில் போலீஸ் விசாரணை கூட இல்லாமல் வாங்கிக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அமலாக்கப் பிரிவினர் அபிலேந்து பாண்டேவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அசன் அலிக்கு பாஸ்போர்ட் வாங்கித் தர இக்பால் சிங், விஜய்சங்கர் பாண்டே இருவரும்தான் தனக்கு உத்தரவிட்டதாக அபிலேந்து வாக்குமுலம் அளித்துள்ளார்.
இக்பால்சிங் தற்போது புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னராக உள்ளார். விஜய் சங்கர் பாண்டே தற்போது உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளராக உள்ளார்.
1997ம் ஆண்டில் இக்பால் சிங் பிகார் மாநில காங்கிரஸ் எம்.பியாக இருந்து குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அசன் அலிக்கு அவர் போலி ஆவணங்கள் உதவியோடு பாஸ்போர்ட் பெற்றுத் தந்துள்ளார்.
மேலும் இக்பால் சிங்கின் மெய்க் காவலர்களில் ஒருவரே பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று அசன் அலிக்காக கையெழுத்து போட்டு அந்த பாஸ்போர்ட்டை பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இக்பால் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். இக்பால் சிங் தற்போது கவர்னராக இருப்பதால், அவரை விசாரிக்க ஜனாதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதையடுத்து ஜனாதிபதி பிரதிபா பட்டீலுக்கு இது தொடர்பாக அமலாக்கப் பிரிவினர் கடிதம் அனுப்பி அனுமதி கோரியுள்ளனர்.
மேலும் இக்பால் சிங்குக்கு அமலாக்கப் பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதே போல உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் விஜய்சங்கர் பாண்டேவுக்கும் அமலாக்கப் பிரிவினர் சம்மன் அனுப்பவுள்ளனர்.
இந் நிலையில் புதுச்சேர் கவர்னர் இக்பால் சிங்கின் சிறப்பு அதிகாரி ஜே.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், கவர்னர் மாளிகைக்கு இதுவரை அமலாக்கத் துறையில் இருந்து சம்மன் வரவில்லை. இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் கவர்னர் இக்பால் சிங்கை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனக்கு சம்மன் வரவில்லை என்று தெரிவித்தார். 1992ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக இக்பால் சிங் இருந்தார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த அமலேந்து பாண்டே கவர்னர் இக்பால் சிங்கை சந்திப்பது வழக்கம்.
அப்போகு பாஸ்போர்ட் விண்ணப்பம் ஒன்றை கவர்னரிடம் பாண்டே கொடுத்துள்ளார். எம்.பி. என்ற முறையில் அந்த பாஸ்போர்ட்டுக்கு பரிந்துரை செய்துள்ளார் இக்பால் சிங். இதில் எந்த முறைகேடும் நடந்ததாகத் தெரியவில்லை என்றும், இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கவர்னர் இக்பால் சிங் தெரிவித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications