புதுச்சேரி கவர்னரிடம் அமலாக்க பிரிவினர் மீண்டும் விசாரணை
புதுச்சேரி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவினர் இன்றும் விசாரணை நடத்தினர்.
நேற்று புதுச்சேரி ராஜ்பவனில் மாலை 4.45 மணியளவில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் 3 பேர் இக்பால் சிங்கிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கவர்னர் மாளிகையின் முன் பக்கமாக நுழைந்த அதிகாரிகள் திரும்பும் போது பின் வாசல் வழியாக சென்று விட்டனர். கவர்னர் மாளிகையின் முன்பக்கம் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்ததால் அவர்கள் பின்புறமாக சென்றனர்.
இந் நிலையில் டெல்லியிலிருந்து வந்த 4 பேர் கொண்ட குழு புதுச்சேரி ராஜ்பவனில் வைத்து சிங்கிடம் இன்றும் விசாரணை நடத்தியது.
மருத்துவ கல்லூரி அறக்கட்டளையில் இருந்து கவர்னர் மகன்கள் விலகல்:
இந் நிலையில் கவர்னர் இக்பால் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன்கள் உறுப்பினர்களாக உள்ள அறக்கட்டளைக்கு மருத்துவ கல்லூரி கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் நெடுங்காட்டில் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட் என்ற நிறுவனம் மருத்துவ கல்லூரி அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. வழக்கமாக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றே மருத்துவ கல்லூரி தொடங்க முடியும்.
ஆனால், அமைச்சரவை ஒப்புதல் பெறாமலேயே இந்த கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கவர்னர் இக்பால்சிங் தனது உறவினர்களுக்காக தனது அதிகாரத்தை தவராக பயன்படுத்தி தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக புகார் கூறப்படுகிறது.
ஆனால், இந்த புகாரை சுகாதாரதுறை இயக்குனர் திலீப்குமார் பாலிகா மறுத்தார். எந்த மருத்துவ கல்லூரிக்கும் அரசு நிலம் நெடுங்காட்டில் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந் நிலையில் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட்டின் உறுப்பினர்கள் விவரம் மற்றும் அதற்கு மருத்துவ கல்லூரி கட்ட வழங்கிய தடையில்லா சான்றிதழ் ஆகியவை பத்திரிகைகளில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டது.
இதில் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட்டில் மொத்தம் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதில் கவர்னரின் மகன்கள் அமர்ஜோத்சிங், அபேசிங் ஆகியோர் பெயரும் உள்ளது. மற்ற உறுப்பினர்கள் கவர்னரின் நண்பர்கள் மற்றும் வேண்டியவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே தனது குடும்ப டிரஸ்ட் நிறுவனத்திற்காகவே கவர்னர் இக்பால் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் கவர்னரின் மகன்கள் அந்த டிரஸ்டில் உறுப்பினர்களாக இல்லை என்று புதுவை அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக தலைமை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 25.2.2011ல் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட் நிர்வாகி தீஜிந்தர் பால்சிங் அரசுக்கு எழுதிய கடிதத்தில் அறக்கட்டளையில் இருந்து அமர்ஜோத்சிங், அபேசிங், சேத்தன்பால்சிங் ஆகியோர் 15.9.2010ல் ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications