நவரத்னா விருது: என்.எல்.சி. நிறுவனத்துக்கு வைகோ பாராட்டு !

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்கும் நிறுவனம் தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். இந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகின்றது என்றால் அதில் மிகையில்லை.
நாட்டின் உயிர்நாடியான மின்உற்பத்தித் துறையில் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து சாதனையை படைத்து வருகின்றது.
கடந்த நிதி ஆண்டில் 1,788 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்து சிறப்பான இடத்தைப் பெற்றதுடன் ரூ. 1,247 கோடி இலாபம் ஈட்டி என்.எல்.சி.நிறுவனம் சாதனை புரிந்து உள்ளது.
எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் நவரத்னா என்னும் இரத்தினக் கல் இந்திய அரசால் பொறிக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புமிக்க உயரிய நவரத்னா விருதைப் பெற்று இருக்கின்ற என்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.எல்.சி. மென்மேலும் வளர்ந்து மகாரத்னா விருதையும் பெற்றிட வாழ்த்துவதுடன், என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனமாக ஒளிவீசித் திகழ்ந்திட ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications