மின் உற்பத்தியை பெருக்க அதிக காற்றாலைகள் அமைக்க முடிவு
நெல்லை: தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி, தென்காசி, ராதாபுரம் பகுதிகளில் புதிய காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன.
நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மானூர், சங்கரன்கோவிலிலும், குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி பகுதியிலும் காற்றாலைகள் நிறுவுதல் ஒரு தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக காற்றாலைகளில் இருந்து தினமும் 2 ஆயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரையிலுள்ள 6 மாத காலத்தில் காற்றாலைகளின் மொத்த மின் உற்பத்தி 85 சதவீதமாகவும், மீதம் 15 சதவீத மின்சாரம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலுள்ள காலத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேனி, தென்காசி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. புதிய காற்றாலைகளை அரசு ஊக்குவிக்கும் பட்சத்தில் மின் வெட்டு பிரச்சனை தீரும். மேலும் கடந்த 2009-ம் ஆண்டு காற்றாலைகள் மூலம் 2200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டில் 2500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 3500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.












Click it and Unblock the Notifications