காங். கூட்டணி அரசு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் தரும்-ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்டு வரும் பல்வேறு ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மே 13ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் பதிலளிக்கும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு இதுதொடர்பாக ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியின்போது சிதம்பரம் மேலும் கூறியதாவது.

13 என்பது மிகவும் மிகவும் ராசியான எண், எனவே எல்லா விஷயங்களுக்கும் தீர்வு மே 13-ம் தேதி கிடைத்துவிடும். ஊடகங்கள் மத்திய அரசு பற்றி எதை முன்னிறுத்தி வருகிறதோ (ஊழல் குற்றச்சாட்டுகள்) அதில் இருந்து மக்களின் மனநிலை வேறுபட்டதாகவே இருக்கும் என்பது இப்போது நடைபெற்றுள்ள 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும்.

இப்போது நமது நாட்டில் பல்வேறு விஷயங்களில் நீதித்துறை துடிப்பாகச் செயல்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் சிறிது முன்னெச்சரிக்கை தேவை. சட்டத்தின் மூலம் தீர்க்கக் கூடிய விஷயங்களை மட்டுமே நீதிமன்றம் தீர்க்க முடியும். ஆனால் நீதிமன்றத்தின் முன்பு வரும் கேள்விகள் அனைத்துமே சட்டப் பிரச்னையாகவே கையாளப்படுகின்றன.

நீதித்துறையின் செயல்பாடுகளை நான் வரவேற்கிறேன். ஆனால் சில எல்லைக் கோடுகளைத் தாண்டும்போதும் சில கேள்விகளை எழுப்பும் போதும், கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதும், முக்கியமாக அவை முழுவதும் சட்டம் தொடர்பானதாக இல்லாதபோது, அது அபாயகரமானதாவே மாறிவிடுகிறது.

மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் நியமன விஷயத்தில் எழுந்த சர்ச்சை, அவர் பதவி விலக நேரிட்டது, முழுவதும் சட்டம் தொடர்பான விஷயம். இந்த விஷயத்தில் மத்திய அரசு தவறு ஏதும் செய்யவில்லை. அது ஒரு நியமனம், அவ்வளவே. அதனை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றனர். அதனை மறு ஆய்வு செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

தேசிய பயங்கரவாத எதிர்ப்புப் படை அமைக்கும் திட்டம் இறந்து விடவும் இல்லை. அதனைப் புதைத்து விடவும் இல்லை, இந்த திட்டத்தை இன்னும் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

கேள்வி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது சட்டம்- ஒழுங்கு பிரச்னை தானே?

பதில்: இதனை கண்காணித்து தடுப்பது தேர்தல் ஆணையத்தின் பணி. உள்துறை அமைச்சகத்துக்கு இதில் தொடர்பு இல்லை. மாநிலத்தின் பாதுகாப்பு விஷயத்தில் பணத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது.

கேள்வி: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி பல்வேறு விஷயங்களில் உங்கள் கட்சியை குற்றம்சாட்டி வருவது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: நாம் இப்போது பாதுகாப்பு விஷயத்தைப் பற்றித்தான் பேசுகிறோம். சட்டம்- ஒழுங்கு பிரச்னை பற்றியல்ல. இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் கட்சி சார்பில் பதில் அளிக்கப்படும்.

கேள்வி: புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங் உங்களை சந்தித்துள்ளார். அவருக்கு என்ன ஆலோசனை வழங்கினீர்கள்? அவரைப் பதவி விலகக் கூறினீர்களா? அல்லது சிபிஐ-யின் தரப்பில் பிரச்னையை விட்டு வீட்டீர்களா?

பதில்: சிபிஐ இக்பால் சிங்கிடம் விசாரிக்க விரும்பியது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, பதிலளிக்க தயாராக இருப்பதாகக் கூறினார். அதன்படி விசாரணை நடந்தது. இப்போது சிபிஐ-யின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

கேள்வி: ஆனால் அவர் உங்களை இருமுறை சந்தித்தாரே...

பதில்: அந்த விசாரணையில் என்ன நடைபெற்றது என்பதில் நான் தலையிடவில்லை. அது எனது வேலையும் அல்ல. சிபிஐ அவரிடம் விசாரித்துள்ளது. இப்போது முடிவுக்காக காத்திருக்கிறோம் அவ்வளவுதான்.

கேள்வி: நீங்கள் ஏன் அவருக்கு எவ்வித ஆலோசனையும் வழங்கவில்லை?

பதில்: சிபிஐ அறிக்கை வந்தால்தான், அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை வைத்து இக்பால் சிங்குக்கு ஆலோசனை வழங்க முடியும். சிபிஐ விஷயத்தில் காங்கிரஸ் தலையிடுவது இல்லை. சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

கேள்வி: காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சுரேஷ் கல்மாடியின் கைது, கனிமொழியின் பெயர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பது இவை பற்றி எல்லாம் உங்கள் கருத்து?

பதில்: இந்த இரு விஷயங்களையுமே நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஊடகங்கள் நமது சமுதாயத்தின் தூண். அதனை நாம் மறுக்க முடியாது.

கேள்வி: அப்படியானால் ஊடகங்கள் பொய் கூறுவதாகக் கருதுகிறீர்களா?

பதில்: நான் அவ்வாறு கூறவில்லை. ஊடகங்கள் பல விஷயங்களை தாங்களாவே சில கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு வெளியிடுகின்றன.

கேள்வி: எந்த விஷயத்தில் ஊடகங்கள் தவறு செய்வதாக நினைக்கிறீர்கள்?

பதில்: அதனை நான் கூற விரும்பவில்லை. ஊடகங்களின் தகவல்களும், மக்களின் எண்ணங்களும் ஒன்றுதானா என்பதை தேர்தல் முடிவு தெளிவுபடுத்தும்.

கேள்வி: தேர்தலில் மக்கள் உங்களை புறக்கணித்து விட்டால்?

பதில்: மக்களின் மதிப்பீட்டில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்றுதான் அர்த்தம்.

கேள்வி: நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) அறிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து உங்கள் கருத்து?

பதில்: பிஏசி கூட்டத்தில் நடத்த விஷயங்கள் எனது கவனத்துக்கு வந்தன. அந்த கூட்டத்தில் இருந்து அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியேறிவிட்டார். இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் வேறு தலைவரைத் தேர்வு செய்து அதன் பின்னர் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அக்குழுவில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் இதனை ஆதரித்துள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+