ஒசாமாவை வீழ்த்தியதால் ஒபாமாவின் செல்வாக்கு கிடுகிடு உயர்வு

வெளிநாட்டுக் கொள்கையைக் கையாளுவது, அதிபராகப் பணியாற்றுவது, ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத மிரட்டல் உள்ளிட்டவற்றில் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ்-சிபிஎஸ் கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 46 சதவீதமாக இருந்த ஒபாமாவின் செல்வாக்கு, தற்போது 57 சதவீதமாக எகிறியுள்ளது. ஒபாமா சார்ந்த ஜனநாயகக் கட்சி தவிர குடியரசுக் கட்சியினர் மத்தியிலும் கூட ஒபாமாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.
அச்சுறுத்தல் அதிகரிப்பு-அமெரிக்கர்கள் பீதி
அதேசமயம், ஒசாமாவைக் கொன்றுள்ளதால், அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பத்து அமெரிக்கர்களில் 7 பேர் கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள், பின்லேடன் மறைவால் தங்களுக்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உணர்வதாக கூறியுள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பின்லேடன் மறைவு தங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கலாம் என்று அமெரிக்கர்களில் பாதிப்பேர் கூறியுள்ளனர். அதேசமயம், பத்தில் ஆறு பேர், இன்னும் அமெரிக்கா தனது ஆப்கானிஸ்தான் பணிகளை முடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்லேடன் ஓய்ந்து விட்டாலும் கூட தலிபான்கள் இன்னும் வலுவாகவே இருப்பதாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆல்பிரிச் என்பவர் சுட்டிக் காட்டுகிறார். தலிபான்களையும் ஒழித்தால்தான் ஆப்கானிஸ்தான் பணி முடிவடைந்ததாக அர்த்தம் என்கிறார் அவர்.
அதேசமயம், 2014ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி விடுவார்கள் என அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.
அமெரிக்க அதிபர்களைப் பொறுத்தவரை, ஏதாவது ஒரு வெளிநாட்டு வெற்றியைத் தொடர்ந்து அவர்களுக்கு உள்ளூரில் செல்வாக்கு அதிகரிக்கும். அதை வைத்து அவர்கள் பெரும் பலனை அடைந்து விடுவார்கள். இதற்காகவே வெளிநாடுகளில் தங்களது வித்தையை அவர்கள் காட்டத் துடிக்கிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றும்.
இதற்கு முன்பு 2003ம் ஆண்டு சதாம் உசேனை அமெரிக்கப் படையினர் பிடித்தபோது அப்போது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு 8 சதவீத செல்வாக்கு அதிகரித்து அவருக்குப் புகழைத் தேடித் தந்தது உள்ளூரில். ஆனால் ஒரே மாதத்தில் அந்த செல்வாக்கை அவர் இழந்தார். காரணம், சதாம் உசேன் ரசாயண ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார், அதை வைத்திருந்தார், இதை வைத்திருந்தார் என்று கூறி வந்த புஷ்ஷால், அப்படி எதையும மீட்க முடியாததால் அமெரிக்கர்களிடையே அவருக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது செல்வாக்கு சரிந்து கிடந்த ஒபாமாவுக்கும் பின்லேடன் புண்ணியத்தால் அது அதிகரித்துள்ளது.
ஒபாமாவைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் 52 சதவீத செல்வாக்கு காணப்படுகிறது. குடியரசுக் கட்சியினர் மத்தியில் 24 சதவீதமாக இது உள்ளது. கடந்த மாதம் இது 15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியினரில் 86 சதவீதம் பேர் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக கூறியுள்ளனர்.
பொருளாதாரக் கொள்கை படு மோசம்
இப்படி ஒசாமாசவால், ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்திருந்தாலும் கூட வேலைவாய்ப்பின்மை, காஸ் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒபாமாவின் செயல்பாடுகள் அமெரிக்கர்களிடையே தொடர்நது அதிருப்தி அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரது பொருளாதாரக் கொள்கைகள் திருப்தி தரவில்லை என்பதே பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாக காணப்படுகிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கை குறித்து அதிருப்தியே தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பை தொலைபேசி மூலம் மே 2 மற்றும் 3ம் தேதிகளில் எடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒசாமா வேட்டையால் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதாயம் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்தே அவர் அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்லலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications