திமுகவால் கைவிடப்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் பதவி கொடுத்த அதிமுக
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரியிலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. ஆனால் தற்போது அதிமுக அமைச்சரவையில் மீண்டும் இந்த இரு மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் இந்த இரு மாவட்டங்களும் அப்போதைய சேலம் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த சேலம் மாவட்டம் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது அக்காலத்தில். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாஜிதான் சென்னை மாகாண முதல்வராக இருந்தார்.
ராஜாஜி பிறந்த ஊர் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியாகும்.
1965ம் ஆண்டு சேலம் பிரிக்கப்பட்டு முதலில் தர்மபுரி மாவட்டம் பிறந்தது. பின்னர் 2004ல் கிருஷ்ணகிரி மாவட்டம் பிறந்தது.
இந்த இரு மாவட்டங்களுக்கும் அமைச்சர் ஒருவரைக் கொடுத்த பெருமை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த பர்கூர் தொகுதியில் 1991ல் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இதன் மூலம் இந்த மாவட்டத்திற்கு புதிய வெளிச்சம் கிடைத்தது.
அதன் பிறகுதான் இந்த மாவட்டம் குறித்து திமுக கவனம் செலுத்த ஆரம்பித்தது. 96ல் முல்லைவேந்தன் அமைச்சரானார்.
பின்னர் 2001ல் அதிமுக மீண்டும் வென்ற பின்னர் பர்கூரில் போட்டியிட்டு வென்ற தம்பித்துரை கல்வி அமைச்சரானார். பின்னர் 2003ம் ஆண்டு அதிமுகவின் பாலக்கோடு எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அமைச்சர் பதவி பெற்றார்.
இவர்களுக்குப் பிறகு யாருமே இந்த மாவட்டங்களிலிருந்து அமைச்சராகவில்லை. அப்படியே கைவிடப்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் இந்த இரு மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பி. பழனியப்பனுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.முனுசாமிக்கும் அமைசசர் பதவி வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
இதனால் இரு மாவட்ட அதிமுகவினர் மட்டுமல்லாமல், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications