குவாரிகளில் மணல் அள்ள தற்காலிக தடை: கட்டுமானப் பணிகள் கடும் பாதிப்பு
நெல்லை: ஆட்சி மாற்றத்தால் குவாரிகளில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலில் மணல் ஒரு முக்கிய பங்காக உள்ளது. இயற்கை வளங்களில் ஒன்றான மணலை பலர் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக அள்ளி விற்று வந்தனர். இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா மணல் குவாரிகளை திறந்ததுடன், அவற்றை அரசுடமையாக்கினார்.
மணல் குவாரி அரசுடைமையாக்கப்பட்டது முதல் இன்று வரை ஒரு யூனிட் மணல் பொதுப்பணித்துறை மூலம் ரூ.316க்கு மட்டுமே விற்கப்படும் நிலையில் வெளிமார்க்கெட்டில் ரூ.3400 வரை ஒரு யூனிட் மணல் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் நடந்து வரும் அதிக அளவிலான கட்டுமான பணிகள், அரசு நலத்திட்டங்கள், சிமெண்ட் சாலைகள், அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் பணி, இலவச கான்கீரிட் வீடு கட்டும்திட்டம் என கட்டுமான துறையில் ஏற்பட்ட அசுர தேவை காரணமாகவும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிக அளவிலான மணல் கடத்தப்பட்டு வருவதாலும் மணலின் விலை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையால் மட்டுமல்ல இடைதரகர்களின் ஆதிக்கதாலும் மணல் விலை அதிகரித்துள்ளது.
கட்டுமானத்தை துவங்கி ஒரு சில மாதங்களில் முடிப்பதற்குள்ளாகவே பல முறை மணல் விலையேற்றத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு தடை விதக்கப்பட்ட நிலையில் சிவகிரி உள்ளிட்ட பகுதியில் மணல் குவாரி இயங்கி வந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டை ஆகிய குவாரிகளிலிருந்து தான் தற்போது நெல்லை மாவட்டத்திற்கு பெருமளவு மணல் கொண்டு வரப்படுகிறது. தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இந்த மணல் குவாரிகளிலும் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications