ஜெ., விஜயகாந்த், சரத், ஸ்டாலின் உள்பட 229 பேர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர்

முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட 229 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக சுற்றுச்சூழல்துரை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதால் நிகழ்ச்சி நடைபெறுமா என்பது சநதேகமாக இருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. முதலில் சாலை விபத்தி்ல உயிரிழந்த மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு தொடங்கியது.
முதல்வர் ஜெயலலிதா முதலில் பதவியேற்றார். அவருக்கு செ.கு. தமிழரசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள், பிற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
அகர வரிசைப்படி பதவியேற்பு நடத்தப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
கருணாநிதி உள்பட 4 பேர் வரவில்லை
இன்று மட்டும் மொத்தம் 229 பேர் பதவியேற்றுக் கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் டெல்லி சென்று விட்டதால் இன்று வரவில்லை.
அதேபோல அமைச்சர் மரியம் பிச்சை அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியும், திருச்சி கிழக்கு அதிமுக உறுப்பினர் மனோகரும் திருச்சியிலேயே இருந்து விட்டதால் அவர்களும் வரவில்லை.
இவர்கள் நான்கு பேரும் வேறு ஒரு நாளில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
புது மாப்பிள்ளைகளாக புதிய எம்.எல்.ஏக்கள்
முன்னதாக பதவியேற்பு விழாவுக்கு வரும் சட்டசபை உறுப்பினர்கள் மறக்காமல் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்திருந்தார். அதன்படி எம்.எல்.ஏக்கள் தங்களது தேர்வு சான்றிதழுடன் அவைக்கு வந்திருந்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிகாக காலை முதலே எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வரத் தொடங்கி விட்டனர். முதல் முறையாக உறுப்பினராகியுள்ள எம்.எல்.ஏக்கள் உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும், புது மாப்பிள்ளைகள் போல காணப்பட்டனர்.
இருக்கைகள் மாற்றம்:
புதிய கட்டடத்தில் இயங்கி வந்த சட்டசபை தற்போது மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறியுள்ளது.
இதையடுத்து சட்டசபை மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சபாநாயகரின் இருக்கை கடந்த முறை இருந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல கடந்த முறை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்த இடத்தில் தற்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருந்த வரிசை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் என மாற்றப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவார் தற்காலிக சபாநாயகர். அதன் பின்னர் அதற்கான மனு தாக்கல் தொடங்கும். தேர்தல் 27ம் தேதி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து ஜூன் 3ம் தேதி சட்டசபைக் கூட்டம் முறைப்படி தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துவார்.
திமுகவுக்கு கடைசி வரிசை
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுகவினரும் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டசபையில் தற்போது அதிமுக கூட்டணிக்கே பெரும்பாலான இடங்கள் கிடைத்துள்ளன. எனவே 31 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு கடைசி வரிசையில்தான் இடம் உள்ளது. இதன் காரணமாக திமுக உறுப்பினர்கள், ஸ்டாலின் உள்பட அனைவரும் கடைசி வரிசையில்தான் இன்று இடம் ஒதுக்கப்பட்டு அமர்ந்திருந்தனர்.
சட்டசபையில் கட்சிகளின் பலம்:
அதிமுக -146 (மரியம் பிச்சை இறந்து விட்டதால் 145 ஆக குறைந்துள்ளது)
தேமுதிக - 29
திமுக - 23
சிபிஎம் - 10
சிபிஐ- 9
காங்கிரஸ் - 5
பாமக - 3
மனித நேய மக்கள் கட்சி- 2
சமத்துவ மக்கள் கட்சி - 2
புதிய தமிழகம் - 2
கொங்கு இளைஞர் பேரவை - 1
இந்திய குடியரசுக் கட்சி - 1
பார்வர்டு பிளாக் (கதிரவன்) - 1












Click it and Unblock the Notifications