முல்லா ஒமர் கொல்லப்பட்டதாக தகவல்-மறுக்கிறது தலிபான்

முல்லா முகம்மது ஒமர் என்கிற முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதத் தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான்.
ஆப்கானிஸ்தானை முன்பு தலிபான் அமைப்பு ஆட்சி புரிந்தபோது இவன்தான் ஆப்கானிஸ்தானின் தலைவராக செயல்பட்டான். பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததும் ஆப்கானிஸ்தானை விட்டு தலைமறைவானான்.
ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். வடக்கு வசிரிஸ்தான், குவெட்டா ஆகிய பகுதிகளில்தான் இவன் நடமாடி வந்தான்.
2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.
சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில் தற்போது முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ டிவி வெளியிட்ட செய்தியில், குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு முல்லா ஒமர் சென்று கொண்டிருந்தான். அப்போது அவனை பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர்.
முல்லா ஒமரை, முன்னாள் ஐஎஸ்ஐ தலைவரான ஹமீத் குல்தான் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த செய்தியை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு செய்தி இயக்குநரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அந்த செய்தியில் கூற்பபட்டிருந்தது.
தலிபான் மறுப்பு
ஆனால் இந்த செய்தியை உடனடியாக தலிபான் அமைப்பு மறுத்து விட்டது. தங்களது தலைவர் பத்திரமான இடத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான அவரது போர் தொடரும் என அந்த அமைப்பு கூறியுள்ளார்.
முல்லா ஒமர் குறித்த செய்திக்கு இதுவரை ஆப்கானிஸ்தானோ அல்லது பாகிஸ்தானோ விளக்கம் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications