நில பேர சர்ச்சையால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஐவர் அதிரடி கைது
சென்னை: நிலபேர சர்ச்சையில் சிக்கியதால் அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ஐந்து பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் பெயரை தவறாகப் பயன்படுத்தி நில பேரத்தில் ஈடுபட்டதாக வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜி.ஜி. ரவி, சத்துவாச்சாரி, நகர கவுன்சிலர் பாட்சி (எ) ஜெய்சங்கர், வி.ஜி. துளசிராமன், ஜெ. சுரேந்திரன், வி.ஆர். நித்யகுமார் ஆகியோர் மீது புகார்கள் எழுந்தன.
அமைச்சருக்கு நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொண்டு, மாவட்ட அதிகாரிகளிடம் தங்கள் பணிகளைச் செய்யுமாறு இவர்கள் வற்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. அமைச்சர் விஜய் தலைமையில் கடந்த வாரம் நடந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்திலும், கட்சி அமைப்பைச் சேர்ந்த சிலர் அவ்வப்போது தலையிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் இருந்தும் முதல்வர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அமைச்சர் விஜயை திங்கள்கிழமை முதல்வர் அழைத்துப் பேசியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து இதுகுறித்து கட்சி மேலிடத்தில் ஜெ. பேரவை நிர்வாகி ஜானகிராமன் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இந்த ஐந்து பேரையும் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார். இதையடுத்து இன்று காலையில் இவர்கள் ஐந்து பேரையும் இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களுடன் பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டார்.
நிலபேரம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதால் அதிமுகவினர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு அதிரடியாக கைதும் செய்யப்பட்ட விவகாரம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications