மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
வாரங்கல்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காமுகனை நெருப்பால் பொசுக்கி பாடம் புகட்டியிருக்கின்றனர் ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் கிராம மக்கள்.
வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்த மவுனிகா (18) ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
பாலியல் பலாத்காரம்
இதனையறிந்த பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு என்பவன் திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது மவுனிகா கத்தி கூச்சல் போடவே ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அடி உதை, உயிருடன் எரிப்பு
இதைப் பார்த்த கிராம மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். வெளியில் வந்து பாபுவை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளான் பாபு. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரின் தடுப்பையும் மீறி பாபுவை பிடித்து அருகில் இருந்த வைக்கோல் போரில் போட்டு தீவைத்து விட்டனர்.
இதனால் பாபு உயிரோடு கருகி உயிரிழந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடுதல் போலீஸார் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய கிராமத்தினர் தற்போது கிராமத்தை விட்டு தப்பி விட்டனர். மவுனிகா தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தை மவுனிகா தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications