முக்கிய பிரச்சனைகளில் அதிமுக அரசின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆளுநர் உரையில் இலவச அரிசி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, அரசு கேபிள் திட்டம் மற்றும் மாநில நதிகள் இணைப்பு ஆகிய வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சனைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
முந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல.
சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்குக் கால நிர்ணயம் செய்யாமல் கண் துடைப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முழுமையாகவே ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டு புதிதாக மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு ஆரோக்கியமானதல்ல.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, மின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவோ ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இடம்பெறவில்லை.
இலங்கைக் கடற்படையின் கொடூரமான தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலியாகி வரும் நிலையில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டவோ, எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் நிலைக்கு உத்திரவாதம் தரும் வகையிலோ இல்லை என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா. மன்ற விசாரணைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு, ராஜபக்சே போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கோரி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் ராஜபகேசவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோ அதிமுக அரசின் கருத்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது தமிழகத்திலுள்ள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழக அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம்:
இந் நிலையில் கரூரில் நடந்த திருமண விழாவில் பேசிய வைகோ, தமிழ் சமுதாயம் வாழ்வதற்கு மதிமுக உழைத்து வருகிறது. ஆனால் அந்த உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்ற நிலை உள்ளது. இனிமேல் உழைப்பதும் நாமே. அதன் விளைச்சலை அறுவடை செய்வதும் நாமே என்ற நிலை வந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்.
மதிமுகவை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்தோம். இதை கட்சியில் உள்ளவர்கள் சிலர் முணுமுணுத்தார்கள். ஆனால் தமிழக மக்கள், தேர்தல் புறக்கணிப்பு முடிவை பாராட்டி வரவேற்றார்கள்.
கடந்த 5 ஆண்டு கால ஆளுங்கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். அதிமுகவுக்கு மகுடம் சூட்டியுள்ளனர். ஆனால் மதிமுக களத்தில் விலகி நின்றாலும் எப்போதும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டு கொடுத்ததில்லை.
தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறுகள் எதுவும் நடந்தால் அதை சுட்டி காட்டுவோம். அதையும் மீறி, தமிழர்களுக்கு அநீதி ஏற்பட்டால் எதிர்ப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications
