கோவையில் பலத்த சூறாவளி - 50 ஏக்கர் வாழைகள் நாசம்
கோவை: கோவையில் பேரூர் உள்ளிட்ட கோவை புறநகரில் வீசிய சூறாவளிக் காற்றில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சேதமடைந்தன.
சூறாவளி
கோவையின் புறநகர் பகுதிகளான பேரூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை, செல்லப்பகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்கள் விவசாய கிராமங்களாகும். இங்கு வாழை, தக்காளி, திராட்சை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
கோவை முழுவதும் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பலத்த காற்றுடன் விடாமல் மழை பெய்ததில் விவசாயப் பயிர்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாயின.
வாழைகள் நாசம்
தீத்திபாளையம், குப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்தன. இதனால், இப்பகுதி விவசாயிகளுக்கு 40 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, குப்பனூரைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் பயிரிட்டிருந்த 15 ஏக்கர் வாழை சூறாவளி காற்றில் சேதமானது. மறுபடியும், சூறவாளி காற்று வீசக்கூடும் என்பதால், பாதிப்பு இன்னும் அதிகமாகும் என்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
பயிர்க்கடன் பெற்று, ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்து வாழை பயிரிட்டிருந்தோம். 12 மாதப் பயிர் என்பதால், வாழைத்தார் அறுவடைக்கு இன்னும் 3 மாத காலம் உள்ளது. சூறாவளிக்காற்றால், சுற்றுவட்டாரத்திலுள்ள, ஏராளமான வாழைகள் சேதமாகியுள்ளன. ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தீத்திப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரியப்படுத்தினர்.
தொண்டாமுத்தூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சூறாவளியினால் வாழையின் பாதிப்பு குறித்து, குப்பனூர் கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.












Click it and Unblock the Notifications