அரசுடன் பேச்சுவார்த்தைக்காக ராம்தேவ் 2 மணி நேரம் 'பிரேக்'

உண்ணாவிரதம் இருந்து வரும் பாபா ராம்தேவை சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெற வைக்க மத்திய அரசு ரகசியப் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வமான முறையில் பேசி வந்த மத்திய அரசு தற்போது ராம்தேவ் போராட்டத்தில் குதித்து விட்டதால், வேறு வழிகளில் பேச்சுக்களை தொடர்ந்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசுத் தரப்பில், சில கருத்துக்கள் ராம்தேவிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பான பதிலை ராம்தேவிடமிருந்து அரசு எதிர்பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அரசுத் தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனது உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து 2 மணி நேரம் விலகியிருக்கப் போவதாக ராம்தேவ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அரசுத் தரப்பில் பேச வந்துள்ளனர். எனவே 2 மணி நேரம் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு்ச் சென்றார்.
காவி முத்திரை விழாமல் தடுக்க போராடும் ராம்தேவ்:
இதற்கிடையே தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ்-விஎச்பி-பாஜக ஆதரவு முத்திரை விழ ஆரம்பித்திருப்பதால் ராம்தேவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தான் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், அமைப்புக்கும் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்று ஆரம்பத்திலிருந்தே அவர் கூறி வருகிறார். அதேசமயம், எந்த ஒரு கட்சிக்கு எதிரான போராட்டமும் இது அல்ல என்றும் கூறி வருகிறார்.
இருப்பினும் சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட சங் பரி்வார் அமைப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும், பங்கேற்பதும் இந்தப் போராட்டத்திற்கு காவி கலரடிக்க ஆரம்பித்துள்ளது.
இன்று அவர் பலமுறை பேசியபோதும், இந்தப் போராட்டம் எந்த ஒரு அமைப்புக்கும், கட்சிக்கும் ஆதரவானதல்ல, இது அரசியல் நோக்கத்தினாலான போராட்டம் அல்ல என்று திரும்பத் திரும்பக் கூறியவண்ணம் இருந்தார்.
ஆனால், காங்கிரஸ் இதையே சுட்டிக் காட்டிய வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications