வெப்பச் சலனம்-தமிழகம் முழுவதும் மழை-சென்னையில் காற்றுடன் கன மழை

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
வெப்ப சலனம் காரணமாக சென்னையில் நேற்று 7.30 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையை விளாசிய காற்று, மழை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கன மழை பெய்து மக்களை குஷிப்படுத்தி விட்டது.
நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சாலைகளில் ஓடியதால் வழக்கம் போல போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்தது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆட்டோக்கள், டூவீலர்கள், கார்கள் என பல வகையான வாகனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்ததை விட வேதனையைத்தான் அதிகம் உணர்ந்தனர். காரணம், போதிய மழை நீர் வடிகால் வசதிகள் இல்லாததால் சாலைகளிலும், தெருக்களிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து மக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது
இருவர் பலி
நேற்று பெய்த இந்த மழைக்கு இரண்டு பேர் பலியாகி விட்டனர்.
விருகம்பாக்கம் பகுதியில், காமராஜர் தெருவில், மழை மற்றும் காற்று காரணமாக மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்தப் பகுதி வழியாக சைக்கிளில் வந்த அரீஸ் என்ற 18 வயது பிளஸ்டூ மாணவர் கம்பி மீது சைக்கிளை ஏற்றஇயபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல சேத்துப்பட்டு, டோபிகானா பகுதியில், 51 வயதான முனுசாமி என்பவர் இடி விழுந்து மரணமடைந்தார். இவர் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் வேலை பார்த்து வந்தவர் ஆவார்.
விமான சேவையில் கடும் பாதிப்பு
கன மழை மற்றும் காற்று காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து இரவு 7-15 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விமானம் பலத்த மழை-காற்று காரணமாக தரை இறங்க முடியவில்லை. எனவே அந்த விமானம் வானில் வட்டமிட்ட பின் 30 நிமிடத்துக்கு பின் பத்திரமாக தரை இறங்கியது.
இது போல மதுரையில் இருந்து சென்னைக்கு 7-05 மணிக்கு வந்து சேர வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானமும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்க முடியவில்லை. எனவே அந்த விமானமும் வானத்தில் வட்டமிட்டபடியே இருந்தது. பின்னர் 7-35 மணிக்கு பத்திரமாக தரை இறங்கியது.
இதுபோல மதுரையில் இருந்து மாலை 6-55 மணிக்கு மீனம்பாக்கத்தில் இறங்க வேண்டிய விமானம் இரவு 8 மணிக்கு தரை இறங்கியது. மும்பையில் இருந்து சென்னைக்கு இரவு 7-15 மணிக்கு வர வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் 7-35 மணிக்கு வந்து சேர்ந்தது.
டெல்லியில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இரவு 7-25 மணிக்கு வர வேண்டும். ஆனால் அந்த விமானம் 7-55 மணிக்கு தரை இறங்கியது.
சில விமானங்கள் அந்த நேரத்தில் தரை இறங்கியபோதிலும், கடும் சூறாவளி வீசியதால், விமானத்திலேயே 30 நிமிடத்துக்கு மேல் பயணிகள் காத்திருந்து பின்னர் வெளியே வந்தனர்.
டெல்லியில் இருந்து 127 பயணிகளுடன் வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாததால், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
இதுபோல கொல்கத்தாவில் இருந்து இரவு 7-40 மணிக்கு தரை இறங்க வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், மழை காரணமாக சென்னையில் தரை இறங்க முடியவில்லை. எனவே அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
இந்த விமானம் சென்னையில் தரை இறங்கி பின்னர் ஹைதராபாத்துக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக அந்த விமானத்தில் ஹைதராபாத் செல்ல 80 பயணிகள் காத்திருந்தனர். ஆனால் அந்த குறிப்பிட்ட விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதால், காத்திருந்த பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஸ்பைஸ் ஜெட் விமான கவுண்டர் முன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து விமான நிறுவன அதிகாரிகள், பெங்களூர் சென்ற விமானம் இன்னும் சில மணி நேரத்தில் சென்னைக்கு வரும் செல்லும் என்று உறுதி அளித்தனர். இதனால் பயணிகள் அமைதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications