For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்

Google Oneindia Tamil News

வேலூர்: தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கேபிஎன் ஆம்னி பேருந்தின் டிரைவர், இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது.

காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.

1.30 மணியளவில் பேருந்து அவலூரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் ஆம்னி பேருந்தின் டிரைவர் நாகராஜ் தடுமாறினார். உடனடியாக பேருந்தை இடதுபுறமாக அவர் திருப்பியுள்ளார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கால்வாய் பாலத்தின் சுவரில் மோதி இடித்துத் தள்ளி கீழே விழுந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

லாரி டிரைவர் ஏன் திடீரென பிரேக் போட்டார் என்பது தெரியவில்லை. அதேசமயம், பேருந்து அதிவேகமாக போய்க் கொண்டிருந்ததா என்பதும் தெரியவில்லை.

விபத்தில் உயிர் தப்பிய நாகராஜ் உடனடியாக அடுக்கம்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை உடனடியாக போலீஸார் வேலூர் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நாகராஜ், சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.

அமைச்சர் மரியம் பிச்சை விபத்து போல...

பெரம்பலூர் அருகே அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவமும் கூட இதே போலத்தான் ஒரு லாரியால் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.

முன்னால் போய்க் கொண்டிருந்த லாரி தவறான சிக்னல் காட்டியதால் நிலை குலைந்த அமைச்சரின் கார் டிரைவர் லாரியின் பின்புறம் மோதியதில் அமைச்சர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்றைய சாலை விபத்திலும் கூட லாரி திடீரென பிரேக் போட்டதால்தான் கேபிஎன் பேருந்து டிரைவர் நிலை குலைந்து பாலத்தின் மீது மோதி 23 பேரின் உயிர்களும் பறி போயுள்ளதாக கூறப்படுகிறது.

வாலாஜா மருத்துவமனையில் உடல்கள்

விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்போது வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயிருப்பதால் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

உயிர் பிழைத்தவர் கதறல்

இந்தக் கோர விபத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் மட்டும் உயிர் தப்பினார். காயத்துடன் உயிர் தப்பிய அவர் தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விபத்து குறித்துக் கூறுகையில், பேருந்து அவலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. எப்படி விபத்து நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், பேருந்து கவிழத் தொடங்கியது மட்டும் எனக்குத் தெரியும்.

பேருந்து எதன் மீதோ பலத்த சப்தத்துடன் மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் பின்பக்க அவசர கால கதவு திறந்து கொண்டது. என்ன நடந்தது என்பதை நான் சுதாரிப்பதற்குள் தீ மளமளவென பேருந்துக்குள் பரவி விட்டது. உடனடியாக நான் வெளியே குதித்தேன்.

ஆனால் என்னுடன் பயணித்த எனது மனைவி ஸ்மிதாவை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீது தீ பரவியதால் அவர் உடல் கருகி இறந்து போய் விட்டார் என்றார் கண்ணீர் விட்டபடி.

English summary
Sources say, a lorry, which was going in front of the KPN omni bus was the cause for the gory accident near Kaveripakkam. The lorry was stopped suddenly when it was running near Avalur. After seeing the lorry stopped, omni bus driver attempted to divert the bus left side, but the bus lost its control and rammed into the culvert and plunged. Chennai's Karthik Raja is the only surviving passenger apart from the driver Nagaraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X