தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth with Blackberry Phone
சென்னை: தொகுதி மக்களின் இ-மெயில்களை உடனுக்குடன் படிக்க வசதியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

தேமுதிக மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

அப்போது தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் இ-மெயில்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை விஜயகாந்த் வழங்கினார்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம்-ஜெவுக்கு விஜயகாந்த் கோரிக்கை:

இதற்கிடையே அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கவர்னர் உரையில் ஏழை- எளிய மக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், இந்த அரசு தொலைநோக்கு பார்வையுடன் வளர்ச்சி திட்டங்களுக்கும், கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் அதே முக்கியத்துவத்தை அளித்து தமிழ்நாட்டை வளமான, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தத் திட்டங்களை செயல்படுத்தும்போது அரசு அதிகாரிகள், உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்க செய்யும் வகையில் ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை உருவாக்குவது நமது லட்சியம். குறிப்பாக குடும்பத்தை மையமாக வைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருப்பதை வரவேற்கிறேன்.

இந்திய அரசும், திட்டக் கமிஷனும் இன்னும் ஏழைகள் யார் என்பதற்கு சரியான அளவுகோலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே உண்மையான வறுமைக்கோடு என்ன என்பதையும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு உதவும் வகையில் தெளிவான முடிவெடுக்க மத்திய அரசை தமிழகம் வற்புறுத்த வேண்டும்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி வருகிறார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற்காக வறுமை ஒழிப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

வறுமை எனும் நோய்க்கு வேலைதான் மருந்து. குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் 131 காலி இடங்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் போட்டிப்போடுகிறார்கள். அதாவது ஒரு காலி இடத்துக்கு 1,000 பேர் போட்டியிடுகிறார்கள். அந்த அளவுக்கு படித்த இளைஞர்களிடையே வேலை இல்லை. இதுதவிர படிக்க இயலாத லட்சக்கணக்கான ஏழைகளும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் கொள்கை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்டுத்தப்படவில்லை.

அரசிடம் இருந்து தங்கள் தேவைகளைப் பெற ஏழை- நடுத்தர மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வருவாய் துறையில் சான்றிதழ் பெறவும், காவல்துறையில் புகார் கொடுக்கவும், போக்குவரத்து துறையில் லைசென்ஸ் பெறவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும், மின்சார இணைப்புப் பெறவும், இலவச பட்டாக்கள் பெறவும் என சாதாரண காரியங்களுக்கே ஏழை- எளிய மக்கள் லஞ்சம் எனும் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள்.

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இந்த அரசு, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் கீழ் மட்டத்தில் உள்ள இந்த லஞ்சத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் உண்மையான ஏழைகளை சென்று அடைவதில்லை. கடந்த ஆட்சியில் அதிலும் லஞ்சம் தாண்டவம் ஆடியது.

சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருந்தால்தான் ஒரு நாடு முன்னேற முடியும். எனவே சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படுவது முதன்மையான ஒன்று. அதன்படி இந்த அரசு பொறுப்பு ஏற்ற உடனேயே சமூக விரோதிகளை உடனே கைது செய்ததன் மூலம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஏற்கனவே வெளியில் இருந்தால் மட்டுமல்ல, வீட்டுக்குள் இருந்தாலும்கூட கொலைகளும், கொள்ளைகளும் சாதாரணமாக நடந்தன. எனவே மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். அத்தகைய நிலை இன்று இல்லை.

குற்றவாளிகள் இன்று தவறு செய்ய பயப்படுகிறார்கள். சட்ட விரோதமாக பலரது சொத்துகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் கொடுக்கும் அரசின் முடிவு சிறந்த நடவடிக்கை ஆகும். காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் திறம்பட செயல்பட வழிவகுத்த முதல்வரை மனதார பாராட்டுகிறேன்.

தேவையற்ற சட்ட மேலவை நீக்கப்படுவதை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த அரசு முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

என்றாலும், பல கோடி ரூபாய் செலவு செய்த அந்த கட்டிடம் வீணாக போய்விடாதபடி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். கிராம சுகாதார நிலையங்களை மேம்படுத்தி உரிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.

எனது ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ரிஷிவந்தியம் தொகுதி முழுவதும் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. தொகுதியில் பாம்பு தொல்லையும் உள்ளது. பாம்புகடி சிகிச்சைக்குரிய மருந்து இல்லை. அது கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆட்சியும் தேர்வு செய்யப்பட்ட உடனேயே குறைகளை நீக்கிவிட முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

1967ல் அண்ணா முதல்வராக இருந்தபோது காமராஜர் புதிய ஆட்சி பற்றி கருத்து சொல்ல 6 மாதம் பொறுத்து இருக்க வேண்டும் என்றார். அந்த கருத்து அரசியல்வாதிகள் அளவில் சிந்திக்க கூடியது. அரசு நல்ல காரியங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துவதும், குறைகளை சுட்டிக்காட்டுவதும் எதிர்க்கட்சியின் கடமை. அத்தகைய எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. செயல்படும் என்றார் விஜய்காந்த்.

தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்-விஜயகாந்த் பெருமிதம்:

இந் நிலையில் தேமுதிக கட்சிக்கு தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தையும், முரசு சின்னத்தையும் வழங்கியுள்ளது.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19.05.2011 அன்று தேமுதிக சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதையும், சுமார் 30 இலட்சம் வாக்குகள் பெற்றதையும் மேற்கண்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு ஆணையின்படி ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெறுவதற்குரிய தகுதிகளை தேமுதிக பெற்றுள்ளதால் இந்த அங்கீகாரம் கோரப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கண்ட கடிதத்தை முறையாகப் பரிசீலித்து தேமுதிகவுக்கு அங்கீகாரம் வழங்கி 10.06.2011 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி தேமுதிக தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகவும், அதற்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+