கச்சத்தீவை தாரை வார்க்க ஒருபோதும் திமுக ஒப்புக் கொண்டதில்லை-கருணாநிதி
சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க தி.மு.க. ஒப்புக்கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. பாராளுமன்றத்திலேயே இந்த தீர்மானம் வந்தபோது, வெளிநடப்பு செய்திருக்கிறது தி.மு.க. என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கச்சத் தீவுக்காக பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஜெயலலிதாவும், அந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சியினரும் தேவையில்லாமல் "கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட'' என்று ஆரம்பித்து, கச்சத்தீவினை நான்தான் மத்திய அரசிடம் கூறி இலங்கைக்கு வழங்கும்படி கூறியதைப்போல எண்ணிக்கொண்டு என்மீது வசைமாரி பொழிந்திருக்கிறார்கள்.
வேறு சிலர் தமிழகத்தின் அழிவுக்கே நான்தான் காரணம், காவிரி பிரச்சினைக்கும் நான்தான் காரணம் என்றெல்லாம் வீராவேசமாக முழங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து கச்சத்தீவு தீர்மானம் கொண்டுவரப்பட்டதே; என்மீது விமர்சனக் கணைகள் வீசத்தான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
கச்சத்தீவு மத்திய அரசினால் தி.மு.க. அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு வழங்கப்பட்டது பற்றியும், அதனை வழங்கும்போது 1974-ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்திலே இருந்த உரிமைகள்கூட, 1976-ம் ஆண்டு தமிழகத்திலே குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றபோது பறிக்கப்பட்டுவிட்டன என்பது குறித்தும் நான் பல முறை விளக்கமளித்திருக்கிறேன்.
கச்சத்தீவை தி.மு.க. தாரை வார்த்துவிட்டது என்று; தகவல்கள் எதையும் ஆரம்பம் முதல் அறிந்து கொள்ளாமல், தொடர்ந்து முழங்கிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. தாங்கள் ஆட்சி செய்த 22 ஆண்டுகளில் கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை?
20.4.1992 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, "கச்சத்தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாக தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறார்.
9.6.2011 அன்று பேரவையில் பேசிய ஜெயலலிதா; தான் முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை திரும்பப்பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, குறிப்பாக நான் முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பேசியிருக்கிறார்.
அவர் என்ன முயற்சி மேற்கொண்டார் என்று அவரே சொல்லியிருக்கிறார். அதாவது மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தியதாகவும்; ஆனால் மத்திய அரசு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்.
நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேசியிருக்கிறாரே, அது உண்மையா? தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தும் மத்திய அரசிடம் பல நேரங்களில் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத்தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி அந்த பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை.
2009-ம் ஆண்டு தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது ஜுன் மாதம் 18-ந் தேதியன்று கச்சத்தீவு தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்தியக் கமயூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சார்பில் கச்சத்தீவு பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டுமென்று ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தபோது, பேரவை தலைவரால் அனுமதிக்கப்பட்டு- உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஞானசேகரன், கோ.க.மணி, மகேந்திரன், சிவபுண்ணியம், ரவிக்குமார் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை அவையில் எடுத்துச் சொன்னார்கள்.
அத்தகைய கருத்துகளின் மொத்த தொகுப்பு என்னவென்றால் கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற்கு தரப்பட வேண்டும் என்பதாகும். அதனையொட்டி தமிழக சட்டப்பேரவையில் நான் உரையாற்றியபோது, கச்சத்தீவினை தாரைவார்க்க தி.மு.க. ஒப்புக்கொள்ளவும் இல்லை; ஒருபோதும் உடன்படவும் இல்லை; அனைத்து கட்சியினரும் ஆதரிக்க தயாரென உறுதி அளித்தால் கச்சத்தீவை திரும்பப்பெற அவையிலேயே தீர்மானம் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.
கச்சத்தீவை தி.மு.க. ஆட்சி தாரை வார்த்துவிட்டது என்று திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அப்படி தாரை வார்த்த எந்த சம்பவமும் 1974-ம் ஆண்டில் நடைபெறவில்லை. அந்த ஆண்டில் கச்சத்தீவை இலங்கைக்கு தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்தபோது, அன்றைய தமிழகத்திலே இருந்த மாநில அரசான தி.மு.க. அரசு, அதற்கு பெரும் எதிர்ப்பை தெரிவித்தது. இருந்தபோதிலும், மத்திய அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது.
அப்படி வழங்கப்பட்ட நேரத்திலே கூட, கச்சத்தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளை காயவைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து ஒப்பந்தத்திலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தமிழக தி.மு.க. அரசு வலியுறுத்தியதின் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில், இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழ்நிலையில் தமிழகத்திலே கவர்னர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், அந்த ஷரத்துக்கள் எப்படி அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டன என்றே தெரியாத அளவிற்கு, அந்த ஷரத்துக்கள் பறிபோய்விட்டன. அதற்கு பிறகு அந்த ஷரத்துக்களையாவது சேர்க்க வேண்டுமென்று நாம் மத்திய அரசோடு தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறோம்.
கச்சத்தீவை தாரை வார்க்க தி.மு.க. ஒப்புக்கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. பாராளுமன்றத்திலேயே இந்த தீர்மானம் வந்தபோது, வெளிநடப்பு செய்திருக்கிறது தி.மு.க. என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒன்றைச் சொல்ல வேண்டுமேயானால் 30.9.1994-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் "தீவு நாடான இலங்கைக்கு, இந்த சின்னஞ்சிறிய தீவினை (கச்சத்தீவை) இந்திய அரசு பிரித்துக்கொடுத்தது, இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்''- என்று அன்றைய முதல்வர், ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.
அதே பாடத்தைத்தான் இன்னமும் மத்தியிலே உள்ள அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் பல பிரச்சினைகள் இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத்தீவு அளிக்கப்பட்டது என்று ஜெயலலிதா சொன்னதைப் போலவே, சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா 9-ந் தேதியன்று பேரவையில் பேசியபோதுகூட, தனது உரையில் கச்சத்தீவு பற்றியோ, அதைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றியோ பேசாமல் நீண்ட நேரம் என்னைப் பற்றியும், என்மீது பழிபோடுவதைப் பற்றியும் உரையாற்றியதில் இருந்தே விஷயம் புரிந்தவர்கள் எந்தெந்த விவரங்களையெல்லாம் மறைத்திட முயற்சிக்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.
கச்சத்தீவை காவுகொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண்துடைப்பு நாடகமாக அவையிலே தீர்மானத்தை முன் மொழிந்தவன் நான் என்று ஜெயலலிதா பேரவையிலே சொல்லியிருக்கிறார். தி.மு.கழகம் தேர்தலிலே தோற்றிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு. கழகத்தின் தாயகப்பற்றையும், என்னுடைய தமிழ்ப்பற்றையும் நன்கறிவார்கள். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்களுமல்ல - தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுப் பற்றற்றவர்களும் அல்ல. வென்றவர்கள் சொல்வதெல்லாம் "வேதமும்'' அல்ல என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications