அதிமுகவினரைத் தாக்கியதாக போலீஸ் துணை கமிஷனர் மீது அமைச்சர் புகார்
சென்னை: சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிமுகவினரைத் தாக்கி காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றதாக கூறி சென்னை தி.நகர் காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் செந்தமிழன் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிலோன் ஹோட்டல் என்ற ஒரு ஹோட்டலில் நடந்த சம்பவம் அதிமுக வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் இரண்டு அமைச்சர்கள் தொடர்பு கொண்டிருப்பதால் முதல்வர் அளவிலும் இந்த விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் செந்தமிழன் ஆகிய இருவரையும் நேரில் வரவழைத்து முதல்வர் கண்டித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
நடந்தது என்ன?
சிலோன் ஹோட்டலில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் அதிமுகவினர் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த துணை கமிஷனர் திருநாவுக்கரசு, விதிமுறைகளை மீறி இத்தனை மணிக்கு மேல் ஹோட்டலை திறந்து வைத்துள்ளீர்கள் என்று கூறி ஹோட்டலை மூட உத்தரவிட்டார்.
அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிமுகவினர், தாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் ஜெயலலிதா டெல்லி பயணத்தையொட்டி வழியனுப்புவது தொடர்பான பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டு முடித்து விட்டு வந்து சாப்பிடுவதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் அதை துணை ஆணையர் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. மேலும் தன்னுடன் வாதிட்ட 7 அதிமுகவினரையும் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு போக உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் ஆயிரம் விளக்குப் பகுதி அதிமுக செயலாளர் நுங்கை மாறன்.
தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செந்தமிழன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதி ஆகியோர் காவல் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்த போலீஸாரிடம் வாதிட்டுள்ளனர். தகவல் அறிந்து இணை ஆணையர் சங்கர் விரைந்து வந்து அமைச்சர்களையும், எம்.எல்.ஏவையும் சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் பிடித்து வரப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தமிழன், துணை கமிஷனர் மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இதனால் பெரும் சர்ச்சை நிலவுகிறது. முதல்வர் யார் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவினராக இருந்தாலும் சரி, காவல் நிலையத்திற்குப் போய் போலீஸாரின் பணிகளைத் தடுக்கக் கூடாது என்று ஜெயலலிதா ஏற்கனவே கண்டிப்புடன் கூறியுள்ளார். இந்த நிலையில் 2 அமைச்சர்கள் காவல் நிலையம் போய் அதிமுகவினரை மீட்டு வந்த சர்ச்சையால் பரபரப்பு காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications