ஜூலை 8 முதல் பி.இ கவுன்சிலிங்-எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்ந்து 35 நாட்களுக்கு நடைபெறும். சென்னையில் மட்டுமே இந்த கவுன்சிலிங் நடக்கும்.

தமிழகத்தில் உள்ள 494 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்துகிறது.

இதில் 1.42 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் நேற்று வழங்கப்பட்டன.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்களை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த ஆண்டு கவுன்சிலிங் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் நடக்கும்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. அதில் பொது கவுன்சிலிங்குக்கு உரியவர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 பேர். அவர்களில் 83 ஆயிரத்து 950 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 825 பேர் மாணவிகள். பிளஸ்-2 தொழில்கல்வி படித்து விண்ணப்பித்தவர்கள் 5578 பேர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 348 பேர். 230 பேர் மாணவிகள்.

விளையாட்டு இடஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 457 பேரும், மாற்றுத்திறனாளிகள் 464 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 2 ஆயிரத்து 193 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு தான். காரணம் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருவதற்கு முன்னதாக என்ஜினீயரிங் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் தேர்வு முடிவு வெளி வந்து மாணவர்களுக்கு அவர்களின் மார்க் தெரிந்து விட்டது. இதனால் குறைந்த மார்க் எடுத்த பலர் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கவில்லை.

என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மார்க்குகளின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயார் செய்யப்படும்.

பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெற்றிருக்கும்போது முதலில் கணிதம், பின்னர் இயற்பியல், அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியியல் பாடத்தில் உள்ள மார்க்கை கொண்டு யார் அதிகம் எடுத்தார்களோ அவர்களை முதலில் கவுன்சிலிங்குக்கு அழைப்பார்கள்.

இதிலும் ஒரே மாதிரி வந்தால் பிறந்த தேதியில் யார் சீனியரோ அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிலும் ஒரே நாளில் பிறந்திருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். ரேண்டம் நம்பரில் யாருக்கு அதிக நம்பர் இருக்கிறதோ அவர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை வழங்கப்படும். ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும்.

அடுத்த கட்டமாக விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம் தேதி அன்று நடக்கிறது. முன்னதாக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 29 மற்றும் 29 தேதிகளில் நடைபெறுகிறது.

தொழில்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 6ம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.

ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 மாணவ- மாணவிகள் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் 35 நாட்கள் நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு அதற்கான நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுப்பார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் 64 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 63 பேர் மாணவர்கள். 24 ஆயிரத்து 347 பேர் மாணவிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சலுகை தொடரும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக கிடந்தது. அந்த இடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதற்கான பணிநடைபெற்று வருகிறது.

துணைவேந்தர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் நேர்மையான முறையில் நியமிக்கப்படுவார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

ECE-ME படிப்புகளுக்கு என்ஆர்ஐ மாணவர்கள் போட்டா போட்டி:

இதற்கிடையே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்ஸ், மெக்கனிக்கல் என்ஜினியரிங் பிரிவுகளை போட்டிப் போட்டு தேர்ந்து எடுத்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகியவற்றில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் 345 உள்ளன. இந்த இடங்களுக்கு 310 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கு நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலை அரங்கில் கவுன்சிலிங் நடந்தது.

அவர்கள் மார்க் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்ஸ் பிரிவையும், மெக்கனிக்கல் என்ஜினி்யரிங் பிரிவையும் அதிகம் விரும்பி போட்டிப் போட்டு தேர்ந்தெடுத்தனர்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியீடு:

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன.

இதுதவிர தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் சேருவதற்காக 23,060 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களது ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.

இதில் ராசிபுரம் மாணவி சிவரஞ்சனி முதலிடத்தையும், நாமக்கல் மாணவி தட்சிணி இரண்டாவது இடத்தையும், சென்னை மாணவி ஸ்ருதி கணேஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 30ம் தேதி துவங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+