மத்திய அமைச்சரவை ஜூலை முதல் வாரத்தில் மாற்றம்-தயாநிதி பதவி பறிபோகுமா?

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமரும் தீவிர ஆலோசனை நடத்தினர். அமைச்சரவையயில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர இருவரும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
2 திமுக அமைச்சர்கள் மாற்றம்:
இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது திமுகவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்படலாம் என்றும், இன்னொரு இணையமைச்சர் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
2ஜி விவகாரத்தால் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா விலகினார். அவருக்குப் பதில் திமுகவைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. அந்தப் பொறுப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூடுதலாகக் கவனித்து வருகிறார். அதே நேரத்தில் தயாநிதி விலக்கப்பட்டால் அவருக்குப் பதில் திமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி தரப்படுமா என்பதும் தெரியவில்லை.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் மத்திய அமைச்சராக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் காரணமாக முதல்வர் அசோக் சவாண் விலகியதால் மத்திய இணையமைச்சராக இருந்த பிருத்விராஜ் சவாண் அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். அதே போல மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி மாநில முதல்வரானதால், அவர் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இந்தப் பொறுப்புகளை, பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனித்து வருகிறார். இதையடுத்து இந்தத் துறைகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள், பிரதமருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சரியாகச் செயல்படாத அமைச்சர்களை மாற்றி விட்டு, அந்த பதவிகளை, சிறப்பாகச் செயல்படுவோருக்கு வழங்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அந்த மாநிலத்துக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டணி ஆகியோரின் இலாகாக்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று தெரிகிறது.
முன்னதாக ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள், லோக்பால் மசோதா ஆகிய காரணங்களால் அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் பிரதமராவாரா?:
இந் நிலையில் ராகுல் காந்தி பிரதமர் ஆவது எப்போது என்பது பற்றி அவரும், கட்சியும்தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பதற்கான தகுதியும், நேரமும் வந்துவிட்டதாக கூறியிருந்தார்.
இது குறித்து ஜெயந்தி நடராஜனிடம் கேட்டதற்கு, ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்பது எப்போது என்பது குறித்து அவரும், காங்கிரஸ் கட்சியும், நாட்டு மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தி, குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும், கட்சியை ஜனநாயகப்படுத்துவதிலும், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் மத்தியிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறார்.
இளைஞர்களுக்கு முன்மாதிரியான போற்றுதலுக்கு உரிய தலைவராக ராகுல் விளங்குவதுடன், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி இந்த நாட்டிற்கும் வருங்கால தலைவர் ஆவார். அதே நேரத்தில் நமது பிரதமர் மன்மோகன்சிங், கடந்த 7 ஆண்டுகளாக இந்த நாட்டை தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். அவர் பிரதமராக தொடர்ந்து நீடிப்பார் என்றார்.
இந் நிலையில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை திடீரென முன்னிறுத்துவது குறித்து சோனியா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஆக-1 முதல் செப்-8 வரை மழைக்கால கூட்டத் தொடர்:
இந் நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா ஆகியவை தாக்கல் ஆகலாம் என்று தெரிகிறது.
முன்னதாக ஜூலை 2வது வாரத்தில் இக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், லோக்பால் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி முழித்து வரும் மத்திய அரசு அதை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications