கொச்சியில் சிமி இயக்க முன்னாள் தலைவர் கைது: மபி போலீஸ் அதிரடி
திருவனந்தபுரம்: தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் முன்னாள் தலைவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் செய்யது சலாவுதீன். இவர் இந்தியாவில் சிமி இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன் அந்த அமைப்பின் தலைவராக இருந்தார். இவருக்கு எதிராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரை இந்தூர் போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த சலாவுதீன் துபாய்க்கு தப்பி ஓடினார்.
துபாயில் ஒரு வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் சிறையில் இருந்த சலாவுதீன் கடந்த சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு சலாவுதீன் வருவதாக மத்திய பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. தலைமையில் போலீசார் கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காத்திருந்தனர்.
அதிகாலை 5 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த சலாவுதீனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் மத்திய உளவு பிரிவு போலீசார் (ஐபி) மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சலாவுதீனை ஆலுவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மத்திய பிரதேச போலீசார் இந்தூருக்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications