ஸ்ரீரங்கம் தொகுதியில் குடிநீர், கழிவுநீர், சாலைப் பராமரிப்பு குறைகளை தீர்க்க ஜெ. உத்தரவு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், முதல்வர் ஜெயலலிதாவை மகத்தான வெற்றி பெறச்செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, முதல்வர் ஜெயலலிதா 19.6.2011, 20.6.2011 மற்றும் 21.6.2011 ஆகிய மூன்று நாட்களில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சுற்றுப்பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக, 19.6.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீரங்கம் தொகுதி யில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான 20.6.2011 (திங்கட்கிழமை) அன்று அந்தநல்லூர் ஒன்றியத்தின் கீழுள்ள பெரியகருப்பூர் ஊராட்சி, சுபயபுரம் கிராமத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்கச் சென்றபோது, அந்த கிராமத்து பொதுமக்கள் சுபயபுரம் கிராமத்தில் தெருவிளக்கு எரியாதது, குடிநீர் பற்றாக் குறை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பது போன்ற பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் நேரடியாக அளித்தார்கள்.
சுபயபுரம் கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளும்படி முதல்வர் ஜெயலலிதா, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரை அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், அந்த கிராமத்தில் உள்ள மொத்தம் 23 தெருவிளக்குகளில், செயல்படாமல் இருந்த 13 தெருவிளக்குகள் உடனடியாக பழுது நீக்கப்பட்டு, அனைத்து தெருவிளக்கு களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அதேபோல், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படும் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் சீராக்கப்பட்டது.
மேலும். சுபயபுரம் கிராமம் பெரியசாமி வீடு முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை 200 மீட்டர் நீளத்திற்கு, 3 மீட்டர் அகலத்திற்கு 3.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய பொது நிதியின் கீழ் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சாலைப்பணி 20 நாட்களுக்குள் முடிக்கப்படும். அதே போல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் அருகில் வளைந்து தெளிந்து நின்ற மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்குத் தெரியவந்தவுடன், முதல்வர் ஆணைக்கிணங்க, வளைந்திருந்த மின்கம்பத்திற்கு மாற்றாக உடனடியாக புதிய மின் கம்பம் 22.6.2011 அன்று நடப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 3.2 கிலோ மீட்டர் நீளமுள்ள அதவத்தூர் - கொய்யா தோப்பு சாலை முடிவில், 110 மீட்டர் நீள சாலை நெடுஞ்சாலைத்துறையாலோ, ஊராட்சி ஒன்றியத்தாலோ பராமரிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி “முதல்வர் தொகுதியில் எல்லை படுத்தும்பாடு" என்ற தலைப்பில் பத்திரிகைகளில் வந்த செய்தியை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலைப் பணியை உடனடியாக மேற் கொள்ள ஆணையிட்டார்கள்.
அதன் அடிப்படையில், 2 லட்ச ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத்துறையால் இந்த சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் 4.7.2011-க்குள் முடிவடைந்து விடும்.
முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மூன்று நாட்களிலும் அவரது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications