முரளி தியோரா ராஜினாமா?-மகனை அமைச்சராக்க சோனியாவுக்கு கோரிக்கை
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு முன் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் முரளி தியோரா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
தியோரா தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா க்ந்தியிடம் கடந்த வாரமே கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது. தனக்கு பதில் தனது மகன் மிலிந்த் தியோராவை மத்திய இணை அமைச்சராக்குமாறு சோனியா காந்தியிடம் அவர் கோரியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு மும்பையில் இருந்து இரண்டு முறை எம்.பியானவர் மிலிந்த்.
முரளி தியோரா பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அவர் காட்டிய சலுகைகளால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட பல்லாயிரம் கோடி இழப்புகள் குறித்து சமீபத்தில் மத்திய தணிக்கைத் துறை அறிக்கை வெளியிட்டது.
தியோராவைத் தொடர்ந்து இந்தத் துறையின் அமைச்சரான ஜெய்பால் ரெட்டி, தணிக்கைத் துறையின் அறிக்கைக்கு கொடுத்த முக்கியத்துவம் தியோராவை கடுப்பாக்கிவிட்டது. தியோரா செய்தது தவறே என்றரீதியில் கருத்துக்களை தெரிவித்தார் ஜெய்பால் ரெட்டி.
ரெட்டியில் செயல்பாடுகளால் எரிச்சலாகிவிட்ட தியோரா பதவி விலக முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் தனது மகனை இணையமைச்சராக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தான் தியோரா கார்ப்பரேட் விவகாரத் துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
