சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களைக் கொண்ட குழுவும் சதியும்- கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்ததின் அடிப்படையில், சமச்சீர் பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக, தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010' இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டு ஓராண்டு அந்த மாணவர்களும் அதனைப் படித்து முடித்துவிட்டனர்.
2011-2012ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய்ச் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி சட்டத்தினை தள்ளுபடி செய்யக்கோரி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது என நிலைநிறுத்தம் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடை வழங்கக் கோரி டெல்லி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே.சியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் கூறும்போது, "சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா? இவைப்பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்'' என்று தெரிவித்து, அ.தி.மு.க. அரசின் சமச்சீர் கல்வி தொடர்பான திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்தபோது, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்திரகுமார் அளித்த தீர்ப்பில்; "1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும். 2 முதல் 5ம் வகுப்புவரையும், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படுகிறது.
இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும்''- என்று கூறியது.
இந்தத் தீர்ப்பின்படி அ.தி.மு.க. அரசு கல்வியாளர்கள் குழு ஒன்றினை அமைத்தது. அந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்து பலராலும் சொல்லப்பட்டது.
அதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அந்தக் குழுவினைக் கொண்டே அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து, நேற்றைய தினம் அந்த அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை சமச்சீர் கல்வி முறை ஏற்கத்தக்கது அல்ல என்றும், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சமச்சீர் கல்வி இல்லை என்றும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், பாடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் உள்ளது என்றும் முரண்பட்ட பல காரணங்களையெல்லாம் சொல்லி, எப்படியாவது சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்தவிடாமல் செய்வதற்கான முயற்சியிலே அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவினைத் தெரிவிக்கவுள்ளது.
சமச்சீர் கல்வி முறை பல்வேறு குழுக்களால் பல ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டு, பாடத் திட்டங்கள் முறைப்படி வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த திட்டமாகும். அதனை எப்படியாவது கெடுக்க ஆட்சிக்கு வந்திருப்போர் முயற்சிப்பதை ஏற்கனவே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உணர்ந்துதான் தங்களது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான தீர்ப்பினை இறுதித் தீர்ப்பாக வழங்கி மாணவர்களின் எதிர்கால நலனைக் காப்பாற்றுவார்கள் என்று பெரிதும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
நலிந்தோருக்கு கருணாநிதி ரூ. 2 கோடி உதவி:
இதற்கிடையே நலிந்தோருக்கு மருத்துவம் மற்றும் கல்விச் செலவுக்காக இதுவரை ரூ.2 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரம் நிதி உதவியை கருணாநிதி வழங்கியுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயில் இருந்து வரும் வட்டி தொகையில் 2007ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.
2005ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 2 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரம். மேலும் 2011ம் ஆண்டு ஜுன் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு மொத்தம் ரூ.3,20,000 கடந்த 6ம் தேதி அன்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications