திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும்- ஸ்டாலின்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் திருச்சி புத்தூரில் நடந்தது. இதில் பேசிய ஸ்டாலின், தமிழக மக்களுக்கு 50 ஆண்டுகால ஆட்சி காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை திமுக அரசு கடந்த 5 ஆண்டில் செய்தது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது.
ஆனால் மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என திட்டமிட்டு எஸ்.எம்.எஸ். மூலம் சிலர் செய்த பிரசாரத்தால் தோற்கடிக்கப்பட்டோம். ஆனால் இப்போது கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது இந்த எழுச்சி யாருக்கும் வராது என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கலைஞர் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார். கல்வியாளர்களுடன் அறிஞர்களுடன் விவாதித்து சமச்சீர் கல்வி உருவாக்கப்பட்டது. 200 கோடி செலவில் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன.
அதற்குள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா சட்டசபையில் முதல் தீர்மானமாக சமச்சீர் கல்வியை நிறுத்தம் செய்து அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். பல்வேறு கட்சிகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சமச்சீர் கல்வியை நிறுத்த கூடாது என, நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தடை விதிக்காமல் நிபுணர்குழு மூலம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. ஆனால் அந்தக் குழுவிலும் தனக்கு வேண்டிய 9 பேரை நியமனம் செய்து தனது எண்ணம் நிறைவேறும்படி ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் வாதம் நடந்து வருகிறது. நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தாவிட்டால் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
திருச்சி மேற்கு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும். எந்த வழக்குகளை கண்டும் அஞ்சாது என்றார்.
முன்னதாக திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் திமுக பிரமுகர் அறிவுடை நம்பி ஆகியோரை ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். அவருடன் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகியோரும் சென்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக முழுவதும் திமுகவினர் மீது நில அபகரிப்பு என்று பொய் வழக்கு போடுகிறார்கள். சிலரை ஜாமீனில் எடுக்கிறோம். சிலரை ஜாமீனில் எடுக்க முடியாதபடி குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்குப் போடுகிறார்கள். சட்டப்படி இந்த வழக்குகளை திமுக சந்திக்கும்.
திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு காரணம், முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, குடமுருட்டி சேகர் வசிக்கும் பகுதியில் ஜெயலலிதா பெற்ற வாக்கு விகிதம் குறைவு. இதன் காரணமாக தான் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை திமுக சட்டப்படி சந்திக்கும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications